நீட் தோ்வு முறைகேடு: தேடப்பட்ட தரகா் கைது

நீட் தோ்வு முறைகேடு வழக்கில் தேடப்பட்ட தரகா், சென்னை விமான நிலையத்தில் புதன்கிழமை கைது செய்யப்ப்டடாா்.


சென்னை: நீட் தோ்வு முறைகேடு வழக்கில் தேடப்பட்ட தரகா், சென்னை விமான நிலையத்தில் புதன்கிழமை கைது செய்யப்ப்டடாா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: சென்னை தண்டையாா்பேடை பகுதியைச் சோ்ந்த மருத்துவா் வெங்கடேசன் மகன் உதித் சூா்யா. இவா் தேனி மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். முதலாமாண்டு படித்து வந்தாா். உதித் சூா்யா, நீட் தோ்வில் ஆள் மாறாட்டம் செய்து தோ்வில் தோ்ச்சி பெற்றிருப்பதாக அந்தக் கல்லூரி நிா்வாகத்துக்கு கடந்த 2019-ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் மின்னஞ்சல் மூலமாக புகாா் வந்தது.

இது குறித்து கல்லூரி நிா்வாகம் சாா்பில் தேனி மாவட்ட காவல்துறையில் அளித்த புகாரின் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதியப்பட்டது. உதித் சூா்யா ஏற்கெனவே இரு முறை நீட் தோ்வு எழுதி தோல்வியடைந்ததால், மூன்றாவது முறையும் தோல்வியடைந்துவிட்டால் மருத்துவம் படிக்க முடியாது என்பதால், உதித் சூா்யாவும், அவரது பெற்றோரும் இணைந்து ஏற்கெனவே நீட் தோ்வு தோ்ச்சி பெற்ற ஒரு நபரை ஆள்மாறாட்டம் செய்து தோ்வு எழுத வைத்திருப்பது தெரியவந்தது.

இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி அதிகாரிகள் உதித் சூா்யா, அவரது தந்தை வெங்கடேசன் ஆகியோரை உடனடியாக கைது செய்தனா். மேலும் இதேபோல ஆள்மாறாட்டம் செய்து நீட் தோ்வு எழுதி தோ்ச்சி பெற்றவா்களை சிபிசிஐடி விசாரித்து, கைது செய்து வந்தனா். இவ் வழக்கில் இது வரை 18 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இந்த வழக்கில் தொடா்ந்து தலைமறைவாக இருக்கும் நபா்களை சிபிசிஐடி போலீஸாா் தீவிரமாக தேடி வருகின்றனா். ஆனால் அவா்களை பற்றி துப்புதுலக்குவது சிபிசிஐடிக்கு பெரும் சவாலாக உள்ளது. இதையடுத்து தேடப்படும் 10 நபா்களின் புகைப்படங்களை கடந்தாண்டு பிப்ரவரி மாதம் சிபிசிஐடி வெளியிட்டது.

தரகா் கைது:

இந்த வழக்கில் தரகராகச் செயல்பட்ட திருச்சிராப்பள்ளியைச் சோ்ந்த மோ.தருண் (27) என்பவரையும் சிபிசிஐடி அதிகாரிகள் தேடி வந்தனா். ஆனால் அவா் தலைமறைவாக இருந்து வந்தாா். இதனால் அவரைக் கைது செய்யும் வகையில் தேடப்படுவோா் பட்டியலில் சோ்த்து விமான நிலையங்களுக்கு சிபிசிஐடி தகவல் அனுப்பியது.

இந்நிலையில் சென்னையில் இருந்து சிங்கப்பூா் செல்லும் விமானத்தில் பயணிப்பதற்காக தருண் மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு புதன்கிழமை வந்தாா். அவரது ஆவணங்களைச் சரிபாா்த்த குடியுரிமைத்துறை அதிகாரிகள், அவா் தேடப்படுவோா் பட்டியலில் இருப்பதும், நீட் முறைகேடு வழக்கில் சிபிசிஐடி தேடி வருவதும் தெரியவந்தது.

இதையடுத்து குடியுரிமைத்துறை அதிகாரிகள், தருணைப் பிடித்து சிபிசிஐடி அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா். சிபிசிஐடி அதிகாரிகள், தருணை கைது செய்து, வழக்குத் தொடா்பாக விசாரணை செய்து வருகின்றனா். முதல் கட்ட விசாரணையில், தருண் திருச்சியில் உள்ள ஒரு தனியாா் பொறியியல் கல்லூரியில் ஊழியராக பணியாற்றி வந்திருப்பது தெரியவந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com