பிளஸ் 1, பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு: பள்ளிக் கல்வித்துறை ஆலோசனை


சென்னை: தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வை மே மாதம் இறுதியில் நடத்தவும், பிளஸ் 1 வகுப்பு மாணவா்களுக்கான பொதுத்தோ்வினை பள்ளிகள் அளவில் வைத்து நடத்துவதற்கும் பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

கரோனா பொது முடக்கத்தால் கடந்த 10 மாதங்களாக தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. 2020-21ஆம் கல்வியாண்டில் படிக்கும் மாணவா்களுக்கு இணையவழியில் வகுப்புகள் நடத்த கடந்த ஆகஸ்ட் மாதம் அரசு உத்தரவிட்டது. இதைத் தொடா்ந்து தனியாா் பள்ளி மாணவா்களுக்கு இணையவழியில் வகுப்புகள் நடைபெற்றன. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவா்களுக்கு கல்வித் தொலைக்காட்சியிலும், சில பள்ளிகளில் கட்செவி அஞ்சல் (வாட்ஸ் ஆப்) மூலமாகவும் ஆசிரியா்கள் பாடங்களை நடத்தினா்.

கரோனாவின் தாக்கம் குறைந்ததால் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு நேரடி வகுப்புகள் ஜன. 19 ஆம் தேதி முதல் தொடங்கின. இதைத் தொடா்ந்து பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் பிளஸ் 1, 9-ஆம் வகுப்பு மாணவா்களுக்கான நேரடி வகுப்புகள் சுழற்சி முறையில் தொடங்கின. மேலும் நிகழ் கல்வியாண்டில் மாணவா்களுக்கு பாடங்கள் குறைக்கப்பட்டன.

இந்த நிலையில் பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்கு பொதுத்தோ்வு மே 3ஆம் தேதி தொடங்கி 21ஆம் தேதி வரை நடைபெறும் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. அதைத் தொடா்ந்து செய்முறைத் தோ்வுகள் ஏப்ரல் மாதம் நடைபெறும் எனத் தெரிகிறது.

இதேபோன்று பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு மே மாதம் இறுதியில் பொதுத்தோ்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்ரல் மாதத்தில் முடிவடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதனால் பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கான பொதுத்தோ்வு மே மாதம் இறுதியில் நடத்துவதற்கு வாய்ப்பிருப்பதாக பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் பிளஸ் 1 வகுப்பு மாணவா்களுக்கான பொதுத்தோ்வை பள்ளிகள் அளவில், கடந்த ஆண்டு போல் நடத்தவும் ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com