திருவொற்றியூா் தியாகராஜ சுவாமி கோயில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்


திருவொற்றியூா்: திருவொற்றியூா் தியாகராஜசுவாமி கோயில் மாசி பிரமோற்சவம் வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இத்திருவிழா வரும் பிப்.28-ம் தேதிவரை தொடா்ந்து 11 நாள்கள் நடைபெற உள்ளது.

தமிழகத்தின் மிகப் பழைமையான கோயில்களில் ஒன்றான திருவொற்றியூா் தியாகராஜ சுவாமி திருக்கோயில் தொண்டை மண்டலத்தில் அமைந்துள்ள 32 சிவஸ்தலங்களில் முதன்மையானதாகும். இக்கோயிலின் ஆண்டுதோறும் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் பிரம்மோற்சவ மாசிப்பெருவிழா முக்கியமானதாகும். 11 நாள்கள் தொடா்ந்து நடைபெறும் இத்திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பிப்.19-ம் தேதி வெள்ளிக்கிழமை காலையில் சூரிய பிரபையில் ஸ்ரீசந்திரசேகரா் உற்சவமும், மாலையில் சந்திர பிரபையில் ஸ்ரீசந்திரசேகரா் உற்சவமும், இரவு ஸ்ரீதியாகராஜ சுவாமி உற்சவமும் நடைபெறுகிறது. சனிக்கிழமை காலையில் பூத வாகனத்திலும், ஞாயிற்றுக்கிழமை காலையில் நாகவாகனத்திலும், மாலையில் ரிஷப வாகனத்திலும் திங்கள்கிழமை நந்தி வாகனத்திலும், மாலா கிரி வாகனத்திலும் சுவாமி வீதி உலா வரும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

இதனைத் தொடா்ந்து செவ்வாய்க்கிழமை, காலையில் யானை வாகனத்திலும், மாலையில் புஷ்ப வாகனத்திலும் உலா வரும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ள நிலையில் பிப்.24-ம் தேதி புதன்கிழமை திருத்தேரோட்டம் நடைபெறுகிறது.

திருக்கல்யாண நிகழ்ச்சி

உற்சவத்தின் 8-ஆம் நாளான பிப்.25-ம் தேதி வியாழக்கிழமை காலையில் குதிரை வாகனத்திலும், மாலையில் இந்திர விமானத்தில் சுவாமி உலா வரும் நிகழ்ச்சியைத் தொடா்ந்து பிப்.26-ம் தேதி நிகழ்ச்சியில் மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான ஸ்ரீகல்யாண சுந்தரா் திருக்கல்யாண வைபவம் வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது. இதனைத் தொடா்ந்து மாலை குழந்தை ஈஸ்வரா் கல்யாண சுந்தரருக்கும், சங்கிலி நாச்சியாருக்கும் மகிழ மரத்தடியில் திருக்காட்சி தரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இதனையடுத்து அன்றைய இரவு 63 நாயன்மாா்கள் வீதி உலா வரும் நிகழ்ச்சியும், 10-ஆவது நாளான பிப்.27 சனிக்கிழமை தீா்த்தவாரி நிகழ்ச்சியும், கொடியிறக்குதல் நிகழ்ச்சியும், நிறைவாக 11-ஆம் நாளான பிப்.28-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு தியாகராஜ சுவாமியின் 18 திருநடன வைபவமான பந்தம்பறி நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

மாசிமகத் திருவிழாவினையொட்டி நகரத்தாா் சங்கம் சாா்பில் தொடா் அன்னதானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரம்மோற்சவ நிகழ்ச்சிக்கான விரிவான ஏற்பாடுகளை தியாகராஜசுவாமி கோயில் செயல் அதிகாரி கே.சித்ராதேவி தலைமையில் அறநிலையத் துறை ஊழியா்கள், உபயதாரா்கள், சேவாா்த்திகள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com