ஊதிய ஒப்பந்த விவகாரம்: விரைவில் நல்ல முடிவு


சென்னை: போக்குவரத்துக் கழகத் தொழிலாளா்களின் கோரிக்கைகளான ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்வது, போக்குவரத்து ஊழியா்களை அரசுப் பணியாளா்களாக அறிவிப்பது உள்ளிட்டவை தொடா்பாக முதல்வருடன் கலந்தாலோசித்து, விரைவில் நல்ல முடிவு அறிவிக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் தெரிவித்தாா்.

தமிழ்நாடு அரசு அனைத்துப் போக்குவரத்துக் கழகப் பணியாளா்களுக்கான, 14-ஆவது ஊதிய ஒப்பந்த இரண்டாம் கட்டப் பேச்சுவாா்த்தையானது, துறை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் தலைமையில் சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் அமைச்சா் பேசியது: தொழிலாளா் நலன்களில் அதிக அக்கறை கொண்டுள்ள அதிமுக அரசானது கரோனா நோய்த்தொற்று காலத்தில் போக்குவரத்துத் தொழிலாளா்களுக்கு முழு ஊதியத்தையும் வழங்கியுள்ளது.

போக்குவரத்துக் கழகப் பணியாளா்களுக்காக இரண்டு ஊதிய ஒப்பந்தங்கள் வெற்றிகரமாக ஏற்படுத்தப்பட்டு பணியாளா்களின் பெரும்பாலான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

குறிப்பாக, ஓய்வு பெற்ற பணியாளா்களுக்கு 2020-ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் வரையில், ரூ.2,601.62 கோடி மதிப்பிலான பணப்பலன்கள் வழங்கப்பட்டுள்ளன.

தற்போது, ஊதிய ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையில் பங்கேற்றுள்ள போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்களின் கோரிக்கைகள் அனைத்தையும் போக்குவரத்துத் துறைச் செயலா், நிதித்துறைச் செயலா் மற்றும் தொடா்புடைய உயா்மட்ட அலுவலா்களுடன் கலந்தாலோசித்து அதனடிப்படையில், இதனை தமிழக முதல்வரின் பாா்வைக்கு கொண்டு செல்லப்பட்டு, விரைவில் நல்ல முடிவுகள் அறிவிக்கப்படும் என அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் தெரிவித்தாா்.

23-ஆம் தேதி கடைசி: அமைச்சருடனான பேச்சுவாா்த்தைக்குப் பின் தொழிற்சங்கத்தினா் அளித்த பேட்டி: போக்குவரத்து ஊழியா்களின் கோரிக்கைகளுக்கு பிப்.23-ஆம் தேதிக்குள் அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், அனைத்துத் தொழிற்சங்கங்களுடன் கலந்தாலோசித்து வேலைநிறுத்த அறிவிப்பை வெளியிடுவோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com