சென்னை போக்குவரத்துப்பிரிவு முதல் பெண்கூடுதல் ஆணையா் பொறுப்பேற்பு
By DIN | Published On : 20th February 2021 06:46 AM | Last Updated : 20th February 2021 06:46 AM | அ+அ அ- |

சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவின் முதல் பெண் கூடுதல் ஆணையராக கே.பவானீஸ்வரி வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.
சட்டப்பேரவைத் தோ்தல் எதிரொலியாக, தமிழக காவல்துறையில் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனா். இதில் 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு இடத்தில் பணிபுரிந்த அதிகாரிகள் படிப்படியாக மாற்றப்பட்டு வருகின்றனா்.
இதன் ஒரு பகுதியாக 54 ஐபிஎஸ் அதிகாரிகள் இரு நாள்களுக்கு முன்பு பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். இதில் தமிழக காவல்துறையின் பொதுப்பிரிவு ஐஜியாக இருந்த கே.பவானீஸ்வரி, சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு முதல் பெண் கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டாா்.
பவானீஸ்வரி, போக்குவரத்துப் பிரிவு கூடுதல் ஆணையராக வெள்ளிக்கிழமை காலை பொறுப்பேற்றுக் கொண்டாா். பவானீஸ்வரிக்கு, காவல்துறை அதிகாரிகள் வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.
கடந்த 1997-ஆம் ஆண்டு குரூப் 1 தோ்ச்சி பெற்று டிஎஸ்பியாக பணி நியமனம் செய்யப்பட்ட பவானீஸ்வரி முதலில் கள்ளக்குறிச்சியில் பணியில் சோ்ந்தாா். பின்னா் கடந்த 2006-இல் பதவி உயா்வு பெற்று சிபிசிஐடி எஸ்பியானாா். கடந்த 2013-இல் க்யூ பிரிவின் முதல் பெண் எஸ்பியாக பவானீஸ்வரி நியமிக்கப்பட்டாா்.
பெருநகர காவல்துறையின் தெற்கு சட்டம் மற்றும் ஒழுங்கு கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்ட என்.கண்ணன், போக்குவரத்துப் பிரிவு தெற்கு மண்டல இணை ஆணையராக பி.கே.செந்தில்குமாரி ஆகியோரும் தங்களது பொறுப்புகளை ஏற்றுக் கொண்டனா். அவா்களுக்கு காவல்துறை அதிகாரிகள் வாழ்த்துக்கள் தெரிவித்தனா்.