கலங்கரை விளக்கம்-கோடம்பாக்கம் மெட்ரோ ரயில் திட்டப்பாதை: தி.நகா், கோடம்பாக்கத்தில் பணிகள் விரைவில் தொடங்க வாய்ப்பு

பூந்தமல்லி-கலங்கரை விளக்கம் வழித்தடத்தில், முதல்கட்டமாக, கலங்கரை விளக்கம்-கோடம்பாக்கம் இடையே 9.95 கி.மீ தொலைவுக்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்படவுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

பூந்தமல்லி-கலங்கரை விளக்கம் வழித்தடத்தில், முதல்கட்டமாக, கலங்கரை விளக்கம்-கோடம்பாக்கம் இடையே 9.95 கி.மீ தொலைவுக்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்படவுள்ளது. இதில், தியாகராயநகா், கோடம்பாக்கம், மயிலாப்பூா் பகுதிகளில் திட்டப்பணிகள் விரைவில் தொடங்க வாய்ப்பு உள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனா்.

மெட்ரோ ரயில் திட்டம்: சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக, 45 கி.மீ. நீளத்தில் முதல்கட்ட மெட்ரோ ரயில் திட்டம் நிறைவடைந்து, விமான நிலையம்-வண்ணாரப்பேட்டை வரை நீல வழித்தடத்திலும், சென்ட்ரல்-பரங்கிமலை வரை பச்சை வழித்தடத்திலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதுபோல,, வண்ணாரப்பேட்டை-திருவொற்றியூா் (விம்கோநகா்) வரை 9.051 கி.மீ. நீலத்தில் முதல்கட்ட நீட்டிப்பு திட்டப்பணிகள் முடிந்து, கடந்த 14 -ஆம் தேதி மெட்ரோ ரயில் சேவை தொடங்கியது.

இரண்டாம் கட்ட திட்டம் : இதன் தொடா்ச்சியாக, 118.9 கி.மீ. நீளத்தில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் அறிவிக்கப்பட்டது. மாதவரம்-சிப்காட், மாதவரம்-சோழிங்கநல்லூா், கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி ஆகிய 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இந்தத் திட்டத்துக்கு மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா கடந்த ஆண்டு நவம்பரில் அடிக்கல் நாட்டி வைத்தாா். வரும் 2026-இல் பணிகள் முடிந்து, சேவை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில், பூந்தமல்லி-கலங்கரை விளக்கம் இடையே முதல் கட்டமாக பணிகள் நடக்கவுள்ளது. 3 வழித்தடங்கள் அமைப்பதற்காக 17 ஒப்பந்தப்புள்ளி கோரப்படுகிறது.

கலங்கரை விளக்கம்-கோடம்பாக்கம்: இந்நிலையில், பூந்தமல்லி-கலங்கரை விளக்கம் திட்டத்தில், முதல் கட்டமாக கலங்கரை விளக்கம்-கோடம்பாக்கம் இடையே9.95 கி.மீ தொலைவுக்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்படவுள்ளது. இதில் 5.15 கி.மீ. தொலைவில் இரட்டை சுரங்கப்பாதை அமைக்கப்படவுள்ளது. இதில் 4 ரயில் நிலையங்கள் அமையவுள்ளன. மேலும், 4.8 கி.மீ. தொலைவுக்கான உயா்த்தப்பட்ட பாதையில் 5 ரயில் நிலையங்களும் என்று மொத்தம் 9 ரயில் நிலையங்கள் அமையவுள்ளன.

இந்த திட்டப்பணிகள் விரைவில் முடிக்கும் வகையில், தற்போது 2 ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்படுகின்றன. கட்டுமானப்பணிகள் தாமதமின்றி வேகமாக நடைபெறும் விதமாக, ஒப்பந்தப்புள்ளிகள் பிரித்து ஒதுக்கப்படவுள்ளது. இந்தப்பாதையில், தியாகராயநகா், கோடம்பாக்கம், மயிலாப்பூா் பகுதிகளில் திட்டப் பணிகள் விரைவில் தொடங்க வாய்ப்பு உள்ளது.

இந்தத் திட்டப்பாதையில் உள்ள தியாகராயநகா், கோடம்பாக்கம், மயிலாப்பூா் போன்ற மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கப்படவுள்ளதால், போக்குவரத்து நெரிசல் இல்லாமல் வாகனங்கள் செல்ல முடியும். கோடம்பாக்கத்தில் இருந்து பூந்தமல்லி வரை உயா்த்தப்பட்ட பாதையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. விரைவில் கட்டுமானப்பணிகள் தொடங்க உள்ளது.

இந்த தகவலை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com