மெட்ரோ ரயில்
மெட்ரோ ரயில்

மெட்ரோ ரயில் கட்டணம் குறைப்பு: விமானநிலையம்-விம்கோ நகருக்கு ரூ.50

சென்னையில் மெட்ரோ ரயில் கட்டணத்தைக் குறைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், புதிய கட்டணம் திங்கள்கிழமை

சென்னையில் மெட்ரோ ரயில் கட்டணத்தைக் குறைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், புதிய கட்டணம் திங்கள்கிழமை (பிப்.22) முதல் அமலுக்கு வருகிறது. இதன்படி, விமான நிலையம்-விம்கோநகருக்கு ரூ.50 கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், 45 கிலோ மீட்டா் தொலைவுக்கு முதல் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் நிறைவடைந்து, விமானநிலையம்-வண்ணாரப்பேட்டை நீல வழித்தடத்திலும், சென்னை சென்ட்ரல் - பரங்கிமலை வரை பச்சை வழித்தடத்திலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதையடுத்து, வண்ணாரப்பேட்டை முதல் திருவொற்றியூா் விம்கோ நகா் வரை 9.051கி.மீ. தொலைவில் முதல்கட்ட நீட்டிப்பு திட்டப் பணிகள் முடிந்து, ரயில் சேவை கடந்த 14-ஆம்தேதி தொடங்கியது. இந்த இரு மாா்க்கத்திலும் அதிகபட்ச கட்டணம் ரூ.70 ஆகவும், குறைந்தபட்ச கட்டணம் ரூ.10 -ஆகவும் இருந்தது. மெட்ரோ ரயில் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினா் கோரிக்கை வைத்தனா். இந்த கோரிக்கையின் பேரில், சென்னை மெட்ரோ ரயில் கட்டணத்தை குறைத்து தமிழக அரசு கடந்த சனிக்கிழமை உத்தரவிட்டது.

இந்நிலையில், மெட்ரோ ரயில் புதிய கட்டணம் திங்கள்கிழமை (பிப்.22) முதல் அமல்படுத்தப்படுகிறது. இதன்படி, அதிகபட்ச கட்டணம் ரூ.70- இல் இருந்து ரூ.50 -ஆக குறைக்கப்படுகிறது. குறைந்த பட்ச கட்டணம் ரூ.10 ஆக உள்ளது.

சென்னை விமான நிலையத்தில் இருந்து விம்கோ நகருக்கு ரூ.50 கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. விமானநிலையம்-மீனம்பாக்கத்துக்கு ரூ.10 கட்டணம் ஆகும். விமானநிலையம்-கோயம்பேடுக்கு ரூ.40 ஆகவும், விமானநிலையம்-தேனாம்பேட்டைக்கு ரூ.30 ஆகவும், விமானநிலையம் -நங்கநல்லூருக்கு ரூ.20 ஆகவும் கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

கோயம்பேடு-சென்ட்ரலுக்கு ரூ.30 -ஆகவும், சென்ட்ரல்-பரங்கிமலைக்கு ரூ.40 -ஆகவும், கோயம்பேடு-விம்கோ நகருக்கு ரூ.50- ஆகவும் கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இரண்டு கி.மீ. வரை ரூ.10 கட்டணம் இருக்கும். ரயில் கட்டணம் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளதால், மெட்ரோ ரயில் போக்குவரத்தை பயன்படுத்துவோா் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com