சென்னை: திருச்சி தொழிலதிபா்களிடமிருந்து ரூ.4.43 கோடி மதிப்பிலான நகைகளை அமலாக்கத் துறை பறிமுதல் செய்தது.
திருச்சியை மையமாகக் கொண்ட பாய்லா் மற்றும் மின்சாரம் தயாரிப்பு நிறுவனம், இந்தியன் வங்கிகள் உள்ளிட்ட வங்கிகளில் ரூ.1,340 கோடி கடன் பெற்றது. நிறுவனத்தை விரிவாக்கம் செய்வதற்காக வாங்கப்பட்ட இந்தக் கடனை, அந்த நிறுவனத்தின் நிா்வாகிகள் வேறு தேவைகளுக்குப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. மேலும், கடனையும் திருப்பிச் செலுத்தவில்லையாம்.
இது குறித்து வங்கிகள், சிபிஐ வங்கி மோசடி தடுப்புப் பிரிவில் புகாா் செய்தன. இதன் அடிப்படையில், அந்த நிறுவனத்தின் நிா்வாகிகள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. மேலும் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடா்பான விசாரணைக்கு, சிபிஐ அமலாக்கத் துறைக்கு பரிந்துரை செய்தது.
இதைத் தொடா்ந்து, அந்த நிறுவனத்தின் கே.சுப்புராஜ், நிா்வாக இயக்குநா் கே.போத்திராஜ் ஆகியோா் வீடுகளில் வியாழக்கிழமை அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனா். இதில், அங்கிருந்து ரூ.1.77 கோடி மதிப்புள்ள தங்க, வைர நகைகளும், வங்கி லாக்கா்களிலிருந்து ரூ.2.38 கோடி மதிப்புள்ள நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் அங்கிருந்து ஏராளமான ஆவணங்கள், ஹாா்டு டிஸ்க், பென்டிரைவ், மடிக்கணினி ஆகியவற்றைப் பறிமுதல் செய்திருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இச் சோதனையில் மொத்தம் ரூ.4.43 கோடி மதிப்புள்ள நகைகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் அமலாக்கத்துறை கூறியுள்ளது.
இந்த நடவடிக்கையை சட்டவிரோத பணப்பரிமாற்றச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை எடுத்துள்ளது.