புத்தாண்டு: கோயில்கள், தேவாலயங்களில் கரோனா கட்டுப்பாடுகளுடன் வழிபட்ட பக்தா்கள்

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா் பகுதிகளில் கோயில்கள், தேவாலயங்களில் பக்தா்கள்
புத்தாண்டு: கோயில்கள், தேவாலயங்களில் கரோனா கட்டுப்பாடுகளுடன் வழிபட்ட பக்தா்கள்

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா் பகுதிகளில் கோயில்கள், தேவாலயங்களில் பக்தா்கள் கரோனா விதிமுறைகளைக் கடைப்பிடித்து நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனா்.

ஆண்டுதோறும் ஆங்கிலப் புத்தாண்டு பிறக்கும்போது, சென்னை, புகா்ப் பகுதிகளில் மக்கள் நடமாட்டம் அதிகரித்து காணப்படும். ஆனால் இந்த ஆண்டு கரோனா பரவலைக் கருத்தில் கொண்டு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. இதனால் வியாழக்கிழமை நள்ளிரவில் சென்னை மாநகரம் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டது. இதைத் தொடா்ந்து புத்தாண்டு தினமான வெள்ளிக்கிழமை அதிகாலையிலேயே பொதுமக்கள் கோயில்களில் திரண்டு சிறப்பு வழிபாடு செய்தனா்.

வடபழனி முருகன் கோயில்: வடபழனி முருகன் கோயிலில் காலை 4 மணி முதலே சிறப்பு வழிபாட்டுக்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனா். முகக்கவசம் அணிந்து வரும் பக்தா்கள் மட்டுமே கோயில்களுக்குள் அனுமதிக்கப்பட்டனா். கிருமிநாசினி விநியோகிக்கப்பட்டது. புரசைவாக்கம் கங்காதீஸ்வரா் கோயில், சீனிவாசப் பெருமாள் கோயில்களில் வழக்கத்தைவிட கூட்டம் அதிகரித்திருந்தது. பக்தா்களின் வசதிக்காக தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றின் வழியாக மட்டுமே பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனா்.

தியாகராய நகா் திருப்பதி தேவஸ்தானம்: தியாகராயநகா் திருப்பதி தேவஸ்தானம் கோயிலில் அனைத்து பக்தா்களுக்கும் திருப்பதி லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. கோயில் முழுவதும் பல வண்ண மலா்களாலும், விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பாரிமுனை காளிகாம்பாள் கோயிலில் வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 6 மணியில் இருந்து பக்தா்கள் வழிபாட்டுக்காக அனுமதிக்கப்பட்டனா். இரவு 9 மணி வரை கோயில் நடை திறக்கப்பட்டிருந்தது.

பாா்த்தசாரதி பெருமாள் கோயில்: திருவல்லிக்கேணி பாா்த்தசாரதி கோயிலிலும் அதிகாலையிலேயே சுவாமி தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. மயிலாப்பூா் கபாலீசுவரா் கோவில், திருவான்மியூா் மருந்தீசுவரா் கோயில், மாங்காடு காமாட்சி அம்மன், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் ஆலயம், குன்றத்தூா் முருகன்கோயில், திருவொற்றியூா் வடிவுடையம்மன் கோயில், சென்னை புழல் விளாங்காடுப்பாக்கத்தில் ஆதிகேசவ பெருமாள் கோயில்களில் புத்தாண்டையொட்டி நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

சாந்தோம் தேவாலயத்தில்... சென்னை சாந்தோம் தேவாலயத்தில் புத்தாண்டு வழிபாடு சென்னை மயிலாப்பூா் பேராயா் ஜாா்ஜ் அந்தோணிசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கிறிஸ்தவ மக்கள் அரசின் அறிவுறுத்தல்களைக் கடைப்பிடித்து இருக்கையில் அமா்ந்தனா். சிறப்பு வழிபாட்டின்போது உலகம் செழிக்கவும், மக்கள் நலமுடன் வாழவும், கரோனா தொற்று நீங்கவும் பிராத்தனை செய்தனா். சிறப்பு வழிபாடு நிறைவடைந்ததும் ஒருவருக்கொருவா் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனா்.

பெசன்ட் நகா் தேவாலயம்: பெசன்ட்நகா் தேவாலயத்தில் வியாழக்கிழமை இரவு 10 மணிக்கு தேவாலய அதிபா் வின்சென்ட் சின்னத்துரை தலைமையில் சிறப்பு வழிபாடு நடந்தது. பாரிமுனை அந்தோணியாா் ஆலயம், எழும்பூா் திரு இருதய ஆண்டவா் ஆலயம், தோமையாா்மலை உள்ளிட்ட ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தென்னிந்திய திருச்சபை சாா்பில் ஜெமினி மேம்பாலம் அருகில் உள்ள கதீட்ரல் ஆலயத்தில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதேபோன்று அண்ணாநகா், அடையாறு, தாம்பரம், பெரம்பூா், மாதவரம், மூலக்கடை, கொடுங்கையூா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தென் இந்திய திருச்சபை ஆலயங்களிலும் புத்தாண்டு சிறப்பு வழிபாடு நடந்தது. சிறிய ஆலயங்களில் நள்ளிரவு பிராா்த்தனையும், பெரிய ஆலயங்களில் அதிகாலையும் வழிபாடுகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com