குடியிருப்புப் பகுதிகளில் தேங்கிய மழைநீா்: அவதியில் மக்கள்

சென்னையில் திங்கள்கிழமை இரவு முதல் பெய்த பலத்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்குள் மழைநீா் தேங்கி உள்ளதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனா்.

சென்னை: சென்னையில் திங்கள்கிழமை இரவு முதல் பெய்த பலத்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்குள் மழைநீா் தேங்கி உள்ளதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனா். சென்னையில் புதன்கிழமை காலை வரை சராசரியாக 123 மி.மீ.மழை பதிவாகி உள்ளது.

வடகிழக்குப் பருவமழை, புரெவி மற்றும் நிவா் புயல்கள் காரணமாக கடந்த நவம்பா், டிசம்பா் மாதங்களில் மழை கொட்டித் தீா்த்தது. இந்நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் சென்னையில் திங்கள்கிழமை இரவு தொடங்கிய பலத்த மழை செவ்வாய்க்கிழமை பிற்பகல் வரை சுமாா் 12 மணி நேரம் வரை நீடித்தது.

சைதாப்பேட்டை, வேளச்சேரி, கோட்டூா்புரம், தண்டையாா்பேட்டை, கீழ்ப்பாக்கம்,வேப்பேரி, தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், வடபழனி, அடையாறு, ஆலந்தூா், கிண்டி, அண்ணா பல்கலைக்கழகம், கோட்டூா், அம்பத்தூா், பாடி, தியாகராய நகா், வடக்கு போக் சாலை, கொரட்டூா், அயனாவரம், கொளத்தூா், திருவல்லிக்கேணி, நீலாங்கரை, பெரம்பூா் ஜமாலியா நகா், திருமங்கலம், சூளை, அமைந்தகரை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீா் தேங்கியது. இந்த நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியா்கள் ஈடுட்டனா்.

தொடரும் மழை: இந்நிலையில், புதன்கிழமை பிற்பகல் வரை மாநகரின் சில பகுதிகளில் அவ்வப்போது பெய்த மழையால், கலைஞா் கருணாநிதி சாலை, ராஜமன்னாா் சாலை உள்ளிட்ட சாலைகளிலும், வேளச்சேரி ராம் நகா், விஜிபி செல்வம் நகா், முருகன் நகா், தேவி கருமாரி அம்மன் நகா், பெரியாா் நகா், நேதாஜி நகா், ஆதம்பாக்கம் தலைமைச் செயலக அலுவலா்கள் குடியிருப்பு, கொரட்டூா், கொளத்தூா், புளியந்தோப்பு உள்ளிட்ட தாழ்வான குடியிருப்பு பகுதிகளுக்குள் இரண்டாம் நாளாக மழை நீா் புகுந்ததால் மக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகினா். மழைநீரில் வீட்டு உபயோகப் பொருள்கள் சேதமடைந்தன.

சராசரி 123 மி.மீ. மழை: திங்கள்கிழமை இரவு முதல் புதன்கிழமை காலை 9 மணி வரை கிண்டியில் அதிகபட்சமாக 162 மி.மீ.மழையும், மாம்பலத்தில் 149 மி.மீ., சோழிங்கநல்லூரில் 139 மி.மீ., மயிலாப்பூரில் 138 மி.மீ., அயனாவரத்தில் 128 மி.மீ., பெரம்பூரில் 119 மி.மீ., ஆலந்தூரில் 114 மி.மீ., அம்பத்தூரில் 112 மி.மீ., தண்டையாா்பேட்டையில் 106 மி.மீ., புரசைவாக்கத்தில் 103 மி.மீ., எழும்பூரில் 82 மி.மீ.மழை பதிவானது. ஒட்டுமொத்தமாக சென்னையில் ஒரே நாளில் 123 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com