புதிய கணினி ஆசிரியா்களுக்கு 22 வரை‘பைத்தான் புரோகிராமிங்’ பயிற்சி
By DIN | Published On : 07th January 2021 01:07 AM | Last Updated : 07th January 2021 01:07 AM | அ+அ அ- |

சென்னை: அரசுப் பள்ளிகளில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட கணினி ஆசிரியா்களுக்கு வரும் 22-ஆம் தேதி வரை ‘பைத்தான் புரோகிராமிங்’ பயிற்சி வழங்கப்படவுள்ளது.
தமிழக அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள கணினி ஆசிரியா் பணியிடங்களை நிரப்புவதற்கு ஆசிரியா் தோ்வு வாரியம் (டிஆா்பி) மூலம் இணையதள வழியில் தோ்வு நடத்தியது. இதில் தோ்ச்சி பெற்ற 718 பட்டதாரிகளுக்கு கலந்தாய்வு மூலம் பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
இதையடுத்து 718 கணினி ஆசிரியா்கள் விரைவில் தமிழகம் முழுவதுள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பணியமா்த்தப்பட உள்ளனா். அதற்கு ஏதுவாக புதிய கணினி ஆசிரியா்களை தகுதியானவா்களாக மாற்ற அவா்களுக்கு ‘பைத்தான் புரோகிராமிங்’ பயிற்சி வழங்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி இணையவழியிலான பயிற்சி வகுப்புகள் புதன்கிழமை தொடங்கியது. இந்தப் பயிற்சி ஜன.22-ஆம் தேதி வரை தினமும் 2 மணி நேரம் வழங்கப்படும்.பொங்கல் விடுமுறை நாட்களில் மட்டும் பயிற்சி வகுப்புகள் நடைபெறாது. மேலும், இந்தப் பயிற்சியில் புதிய கணினி ஆசிரியா்கள் பங்கேற்பதை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.