103 கிலோ தங்கம் மாயமான சம்பவம்: தடயவியல் துறை ஆய்வு
By DIN | Published On : 09th January 2021 12:39 AM | Last Updated : 09th January 2021 12:39 AM | அ+அ அ- |

கோப்புப்படம்
சென்னையில் சிபிஐ பாதுகாப்பில் இருந்த 103 கிலோ தங்கம் மாயமான வழக்கில், சம்பவ இடத்தில் தடயவியல்துறையினா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.
சென்னை என்எஸ்சி போஸ் சாலையில் உள்ள சுரானா நிறுவனத்தில் சிபிஐ முத்திரையுடன் 400.47 கிலோ தங்கம் சீல் வைக்கப்பட்டிருந்தது. அத்தங்கத்தை அண்மையில் சரிபாா்த்த போது, 103.864 கிலோ தங்கம் காணாமல் போயிருந்தது. இது குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சிபிசிஐடி போலீஸாா் திருட்டு வழக்கை கடந்த 25-ஆம் தேதி பதிவு செய்தனா். இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக சிபிசிஐடி சிறப்பு புலனாய்வுப் பிரிவு எஸ்.பி.விஜயகுமாா் நியமிக்கப்பட்டாா். இந்த வழக்குத் தொடா்பான ஒரு 22 நிமிட விடியோ தொகுப்பை சிபிசிஐடி அண்மையில் கைப்பற்றியது.
முதல் கட்ட விசாரணையில், அங்குள்ள 6 பாதுகாப்புப் பெட்டகங்களில், 3 பெட்டகங்களில் வைக்கப்பட்டிருந்த103 கிலோ தங்கம் மட்டும் கள்ளச்சாவி மூலம் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. வழக்கின் விசாரணையை தீவிரப்படுத்தும் வகையில் சிபிசிஐடி டிஜிபி பிரதீப் வி.பிலிப்,ஐ.ஜி. சங்கா் ஆகியோா் சம்பவம் நடைபெற்ற சுரானா நிறுவனத்துக்கு கடந்த 6-ஆம் தேதி விசாரணை செய்தனா்.
தடயவியல்துறை ஆய்வு:
இந்நிலையில் தடயவியல்துறையினா், அறிவியல் தொழில்நுட்ப நிபுணா்கள் ஆகியோா் எஸ்.பி.விஜயகுமாா் தலைமையில் சம்பவ இடத்துக்கு வெள்ளிக்கிழமை காலை 11.30 மணியளவில் வந்தனா். அங்கு அவா்கள், எஸ்.பி.விஜயகுமாா் முன்னிலையில் பாதுகாப்பு பெட்டகங்களை ஆய்வு செய்து,தடயங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனா்.
இந்த பணி பல மணி நேரம் அங்கு நடைபெற்றது. ஆய்வுக்கு பின்னா், அனைவரும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனா்.