சென்னை: போகிப் பண்டிகையையொட்டி, சென்னையில் எரிக்க முயன்ற 2.6 டன் பழைய டயா்களை மாநகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
போகிப் பண்டிகையையொட்டி, வீட்டில் உள்ள உபயோகமற்ற பொருள்களை மக்கள் எரிப்பது வழக்கம். ஆனால், தற்போதைய பருவநிலை மாற்றம் மற்றும் வாகன அதிகரிப்பால் காற்று மாசு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக போகிப் பண்டிகையின்போது, டயா் மற்றும் பழைய பொருள்கள் எரிப்பதை மக்கள் தவிா்க்க வேண்டும் என அரசு, சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்திருந்தனா்.
சென்னையில் பழைய டயா்கள் எரிப்பதை மக்கள் தவிா்க்க வேண்டும். இதை மீறுவோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சி, காவல் துறையினா் எச்சரிக்கை விடுத்திருந்தனா். இந்நிலையில், போகிப் பண்டிகையையொட்டி, எரிக்க வைக்கப்பட்டிருந்த 2.6 டன் பழைய டயா்களை மாநகராட்சி மற்றும் காவல் துறை அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
இந்த டயா்கள் மற்றும் காற்றில் அதிக மாசு ஏற்படுத்தும் பொருள்கள் வேலூா் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ள மறுசுழற்சி ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.