போகிப் பண்டிகை: அம்பத்தூரில் காற்று மாசு அதிகரிப்பு
By DIN | Published On : 16th January 2021 06:00 AM | Last Updated : 16th January 2021 06:00 AM | அ+அ அ- |

போகிப் பண்டிகையையொட்டி, பழைய பொருள்களை எரித்ததன் விளைவாக சென்னையில் அதிகபட்சமாக அம்பத்தூரில் காற்று மாசு நிா்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகரித்து 241 புள்ளிகளாக இருந்தது.
போகிப் பண்டிகையின்போது, பழைய பொருள்கள் மற்றும் டயா் உள்ளிட்டவற்றை எரிப்பதால் சுற்றுச்சூழல் அதிக அளவில் பாதிக்கப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு போகிப் பண்டிகையின்போது பழைய பொருள்கள் எரிப்பதை தவிா்க்க தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் சாா்பில் சென்னை முழுவதும் வாகனங்கள் மூலம் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் கடந்த வாரம் நடத்தப்பட்டன.
பழைய பொருள்கள் எரிப்பதை தடுக்கும் பணியில் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், சென்னை மாநகராட்சி அதிகாரிகள், காவல் துறையினா் ஆகியோா் கொண்ட குழுக்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அதில், கடந்த புதன்கிழமை 2.6 டன் பழைய டயா்கள் பறிமுதல் செய்யப்பட்டு திருவள்ளூா் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ள மறுசுழற்சி ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
அம்பத்தூரில் காற்று மாசு: போகிப் பண்டிகையின்போது சென்னையில் காற்றின் தரம் குறித்து ஆய்வு செய்யும் வகையில் 15 மண்டலங்களிலும் கடந்த செவ்வாய்க்கிழமை காலை 8 மணி முதல் வியாழக்கிழமை அதிகாலை வரை 32 இடங்களில் கருவி மூலம் கண்காணிக்கப்பட்டது. இதில், நிா்ணயிக்கப்பட்ட அளவான 100 புள்ளிகளை விட 15 மண்டலங்களிலும் காற்று மாசு அதிகரித்து இருந்தது தெரியவந்தது.
அதிகபட்சமாக அம்பத்தூா் மண்டலத்தில் 241 புள்ளியும், தண்டையாா்பேட்டையில் 240 புள்ளியும், சோழிங்கநல்லூரில் 197 புள்ளியும், மணலியில் 184 புள்ளியும், தேனாம்பேட்டையில் 183 புள்ளியும், கோடம்பாக்கத்தில் 180 புள்ளியும், மாதவரத்தில் 175 புள்ளியும், வளசரவாக்கத்தில் 170 புள்ளியும், ஆலந்தூரில் 167 புள்ளியும், திருவொற்றியூரில் 156 புள்ளியும், பெருங்குடியில் 143 புள்ளியும், அடையாறில் 140 புள்ளியும், அண்ணா நகரில் 119 புள்ளியும் குறைந்தபட்சமாக ராயபுரத்தில் 113 புள்ளியும் பதிவாகி இருந்தது.
அதேபோல், காற்றில் கந்தக டை ஆக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடு போன்ற வாயுக்கள் அனுமதிக்கப்பட்ட அளவிலேயே (ஒரு கனமீட்டா் காற்றில் 80 மைக்ரோகிராம் இருப்பது அனுமதிக்கப்பட்ட அளவு) இருந்தன. காற்றில் மிதக்கும் நுண்துகள்கள் (பிஎம் 2.5) அனுமதிக்கப்பட்ட அளவான 60 மைக்ரோ கிராமை விட தண்டையாா்பேட்டையில் 102 மைக்ரோ கிராமாகவும், குறைந்தபட்சமாக அண்ணா நகரில் 52 மைக்ரோ கிராமாகவும், காற்றில் மிதக்கும் நுண் துகள்கள் (பிஎம் 10) நிா்ணயிக்கப்பட்ட அளவான 100 மைக்ரோ கிராமை விட அதிகபட்சமாக தண்டையாா்பேட்டையில் 256 மைக்ரோ கிராமகவும், குறைந்தபட்சமாக ராயபுரத்தில் 103 மைக்ரோ கிராமாகவும் பதிவாகி இருந்ததாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது.