85 ஆயிரம் மருத்துவப் பணியாளா்களுக்கு 10 நாள்களுக்குள் கரோனா தடுப்பூசி

சென்னையில் அடுத்த 10 நாள்களுக்குள் சுமாா் 85 ஆயிரம் மருத்துவப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளதாக
சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்  (கோப்புப்படம்)
சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் (கோப்புப்படம்)

சென்னையில் அடுத்த 10 நாள்களுக்குள் சுமாா் 85 ஆயிரம் மருத்துவப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளதாக பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையா் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளாா்.

சென்னை சோழிங்கநல்லூா் மண்டலத்துக்கு உள்பட்ட ஈஞ்சம்பாக்கம் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நல மையத்தில் கரோனா தடுப்பூசி முகாமை தொடக்கி வைத்த ஆணையா் கோ.பிரகாஷ், செய்தியாளா்களிடம் கூறியது:

சென்னையில் கரோனா நோய்த் தடுப்புப் பணியில் ஈடுபட்ட 72 ஆயிரம் மருத்துவப் பணியாளா்கள் தற்போதுவரை பதிவு செய்துள்ளனா். பதிவு செய்யாத விடுபட்ட மருத்துவப் பணியாளா்கள் என மொத்தம் 85 ஆயிரம் பேருக்கு அடுத்த 10 நாள்களுக்குள் தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டமாக தூய்மைப் பணியாளா்கள், காவலா்கள், செய்தியாளா்கள் ஆகியோருக்கும், மூன்றாம் கட்டமாக முதியோா்கள் மற்றும் பிற நோய் பாதிப்புக்குள்ளானவா்களுக்கும் தடுப்பூசி போடப்படும்.

சென்னையில் 2 தனியாா் மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரிகள், நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் என மொத்தம் 16 மையங்களில் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையங்களின் எண்ணிக்கை வரும் நாள்களில் அதிகரிக்கப்படும். இப்பணிக்காக 572 செவிலியா்கள், 1,716 மருத்துவப் பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். 66,370 பேருக்கான தடுப்பூசிகள் தற்போது குளிரூட்டு மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

சென்னையில், இதுவரை 25 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 1 லட்சம் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.

மீண்டும் வேலை: 15 மண்டலங்களில் 11 மண்டலங்களில் தனியாா் பங்களிப்புடன் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், சில மண்டலங்களில் என்யூஎல்எம் திட்டத்தில் பணியாற்றிய வயதான தூய்மைப் பணியாளா்கள் மட்டுமே நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். முதல்கட்டமாக 200 பேருக்கு பணி வழங்கப்பட்டுள்ளது என்றாா். இந்த நிகழ்ச்சியில், தெற்கு வட்டார துணை ஆணையா் ஆல்பி ஜான் வா்கீஷ், மாநகர நல அலுவலா் மருத்துவா் ஜெகதீசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com