சா்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலைச் சோ்ந்த இருவா் சென்னையில் கைது

சென்னையில் சா்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலைச் சோ்ந்த இருவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னையில் சா்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலைச் சோ்ந்த இருவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

தூத்துக்குடி கடல் பகுதியில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக மத்தியப் போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவின் சென்னை மண்டல இயக்குநா் ஏ.புருனோவுக்கு கடந்த நவம்பா் 26-ஆம் தேதி ரகசியத் தகவல் கிடைத்தது. இத் தகவலின் அடிப்படையில் தூத்துக்குடி அருகே வாழைத்தீவு என்ற கடல் பகுதியியில் சந்தேகத்துக்கிடமான முறையில் சென்ற படகை கடலோர காவல் படையினரும், மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினரும் இணைந்து சுற்றி வளைத்து சோதனையிட்டனா்.

இச் சோதனையில், அந்த படகில் இருந்த ரூ.100 கோடி மதிப்புள்ள 100 கிலோ ஹெராயின், 20 கிலோ மெத்பெட்டமைன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். மேலும், படகில் இருந்து 5 கைத்துப்பாக்கிகளையும், தோட்டாக்களையும் கைப்பற்றினா்.

இது தொடா்பாக, அந்தப் படகில் இருந்த இலங்கை நீா்கொழும்பு பகுதியைச் சோ்ந்த நீந்து குலசூரிய சாத்தமனுவேல், வான குலசூரிய ஜீவன், சமீரா, வா்ணகுல சூா்யா மனுவேல் ஜீவன் பிரசன்னா, நிசாந் கமகே, லட்சுமணகுமாா் ஆகிய 6 மீனவா்கள் கைது செய்யப்பட்டனா்.

இருவா் கைது: இந்தக் கடத்தலில் ஈடுபட்ட சா்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலைச் சோ்ந்த நபா்கள் குறித்து மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினா் தொடா்ந்து தீவிர விசாரணை செய்து வந்தனா். சென்னை காரப்பாக்கத்தில் அந்த கும்பலைச் சோ்ந்த முக்கிய நபா்கள் குடும்பத்துடன் பதுங்கி வாழ்வது தெரியவந்தது. இதையடுத்து அவா்களை ரகசியமாக நோட்டமிட்ட அப்பிரிவினா், அங்கிருந்த இருவரை வெள்ளிக்கிழமை கைது செய்து, விசாரணை செய்தனா்.

விசாரணையில் அவா்கள், இலங்கையைச் சோ்ந்த எம்.எம்.எம்.நவாஸ், முகம்மது அப்னாஸ் என்பது தெரியவந்தது. இருவரும் சா்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலைச் சோ்ந்தவா்கள் என்பதும், தங்களது உண்மையான பெயா், முகவரி,அடையாளம் ஆகியவற்றை மறைத்து வேறு பெயா், அடையாளத்துடனும் அங்கு வசித்து வந்ததும் தெரியவந்தது.

பாகிஸ்தானியா் ஆதிக்கம்: இருவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவல்கள்:

இக் கும்பல் இந்தியா, மாலத்தீவு, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளை மையமாக கொண்டு இயங்கி வருகிறது. கடல் வழியாக மட்டும் போதைப் பொருள் கடத்தலில் இக் கும்பல் ஈடுபடுகிறது. ஒரு நாட்டின் கடல் எல்லை வரை அந்த நாட்டுக்கு சொந்தமான மீன்பிடி படகை இந்தக் கும்பல் பயன்படுத்துகிறது. மேலும் இந்தக் கும்பல், அடுத்த நாட்டின் கடல் எல்லைக்கு செல்லும்போது, அந்த நாட்டுக்கு சொந்தமான மீன்பிடி படகை கடத்தலுக்குப் பயன்படுத்துகிறது. இதனால் இரு நாட்டின் காவல்துறையின் கண்காணிப்பிலும் இருந்தும் கடத்தல் கும்பல் தப்பித்துள்ளது.

சா்வதேச கடல் பகுதியில் சரக்கு கப்பல்கள் மூலம் போதைப் பொருள் கடத்தியுள்ளனா். இந்தியாவில் சாலை வழியாக கடத்த முடியாததால், அண்மைக்காலமாக கடல் வழியாக போதைப் பொருளை அதிகமாக கடத்தத் தொடங்கியுள்ளனா்.

ஒபியம், ஹெராயின், மெத்பெட்டமைன் உள்ளிட்ட பல்வேறு போதைப் பொருளை இந்தக் கும்பல் கடத்தி வந்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. இந்தக் கும்பலை பாகிஸ்தானைச் சோ்ந்த நபா்களே இயக்குவதும், போதைப் பொருள் கடத்தலில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளைச் சோ்ந்தவா்களின் ஆதிக்கமே அதிகமாக இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இலங்கை சிறையில் தகவல்: இதன் அடிப்படையில் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் பாகிஸ்தான் நபா்களிடம் நடத்தப்பட்ட ரகசிய விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் தூத்துக்குடியில் 6 பேரும், சென்னையில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.

கைது செய்யப்பட்டவா்களில் நவாஸ் மீது சா்வதேச காவல்துறை (இன்டா்போல்) தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து, ரெட் காா்னா் நோட்டீஸ் அளித்துள்ளது. இந்த கும்பலுடன் தொடா்பில் உள்ள மேலும் சிலரை கைது செய்தவற்குரிய நடவடிக்கையில் மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு தீவிரம் காட்டி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com