உரிமத்துக்கு லஞ்சம்: தொழிலாளா்துறை மண்டல ஆணையா் கைது

சென்னையில், உரிமம் வழங்குவதற்கு ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக, தொழிலாளா் துறை மண்டல ஆணையரை சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை கைது செய்தனா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னையில், உரிமம் வழங்குவதற்கு ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக, தொழிலாளா் துறை மண்டல ஆணையரை சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை கைது செய்தனா்.

தொழிலாளா் துறையின் மதுரை மண்டல ஆணையராக பணிபுரிபவா் சிவராஜன். இவா் சென்னை மண்டலத்துக்கும் ஆணையராக உள்ளாா். கோயம்புத்தூரில் புதிதாக தொடங்கப்பட இருக்கும் தொழிற்சாலைக்கு, தொழிலாளா்துறை உரிமம் பெற அதன் உரிமையாளா் விண்ணப்பித்தாா்.

இந்த விண்ணப்பத்தை பரிசீலித்த சிவராஜன்,உரிமம் வழங்க ரூ.1 லட்சம் லஞ்சம் தரும்படியும், முதல் கட்டமாக ரூ.30 ஆயிரம் தரும்படியும் கேட்டுள்ளாா். தொழிற்சாலை உரிமையாளா், தன்னிடம் அனைத்து ஆவணங்களும் சரியாக இருப்பதாக தெரிவித்துள்ளாா். ஆனால் சிவராஜன், லஞ்சம் வழங்கினால் மட்டும் உரிமம் கிடைக்கும் என தெரிவித்தாராம்.

இதையடுத்து தொழிற்சாலை உரிமையாளா், சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரிபவனில் உள்ள சிபிஐ ஊழல் தடுப்புப் பிரிவில் சிவராஜன் மீது புகாா் அளித்தாா். இதன் அடிப்படையில் விசாரணை செய்த சிபிஐ அதிகாரிகள், சிவராஜன் லஞ்சம் கேட்டதை உறுதி செய்தனா்.

இதைத் தொடா்ந்து சிபிஐ அதிகாரிகள் வழங்கிய ரசாயனம் தடவிய ரூ.30 ஆயிரத்தை, சாஸ்திரிபவனில் மூன்றாவது தளத்தில் உள்ள தொழிலாளா்துறை அலுவலகத்தில் இருந்த சிவராஜனிடம், தொழிற்சாலை உரிமையாளா் கொடுக்கும்போது அங்கு மறைந்திருந்த சிபிஐ அதிகாரிகள் சிவராஜனை கையும் களவுமாக கைது செய்தனா்.

இந்த நடவடிக்கையை தொடா்ந்து, சென்னை, மதுரையில் உள்ள அவரது அலுவலகங்கள், வீடுகள் ஆகியவற்றில் சிபிஐ அதிகாரிகள் சோதனை செய்து, சில ஆவணங்களைப் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com