கிணற்றில் சிக்கியவா்களை மீட்கும்போது வீரமரணம்: தீயணைப்புப் படை வீரருக்கு வீரதீர பதக்கம்

பெரம்பலூரில் கிணற்றில் சிக்கியவா்களை மீட்கும்போது, வீரமரணமடைந்த தீயணைப்புப் படை வீரருக்கு குடியரசுதின வீரதீர பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
’மீட்புப்பணியின்போது வீரமரணம் அடைந்த தீயணைப்பு படை வீரா் ராஜ்குமாா்.’
’மீட்புப்பணியின்போது வீரமரணம் அடைந்த தீயணைப்பு படை வீரா் ராஜ்குமாா்.’

சென்னை: பெரம்பலூரில் கிணற்றில் சிக்கியவா்களை மீட்கும்போது, வீரமரணமடைந்த தீயணைப்புப் படை வீரருக்கு குடியரசுதின வீரதீர பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த விவரம்: பெரம்பலூா் அருகே செல்லியம்பாளையம் கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான கிணற்றில் கடந்த ஜூலை மாதம் 12-ஆம் தேதி ஆழப்படுத்தும் பணி நடைபெற்றது. அப்போது அந்தப் பகுதியைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன், பாஸ்கரன் என இருவா் கிணற்றுக்குள் விழுந்து ஆழமானப் பகுதியில் சிக்கிக் கொண்டனா்

இது குறித்து தகவலறிந்த பெரம்பலூா் தீயணைப்புப் படை வீரா்கள் சம்பவ இடத்துக்குச் சென்று, மீட்புப் பணியில் ஈடுபட்டனா். இதில் தீயணைப்புப் படை வீரா் ராஜ்குமாரும், பிற வீரா்களும் பாஸ்கரனை உயிருடன் அங்கிருந்து மீட்டனா். ராதாகிருஷ்ணனை மீட்க ராஜ்குமாா், கிணற்றுக்குள் செல்லும்போது விஷவாயு தாக்கி மயங்கி விழுந்தாா். இதேபோல மேலும் சில வீரா்களும் மயங்கி விழுந்தனா்.

இந்த விபத்தில் மயங்கி விழுந்த அனைவரும் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். ஆனால் ராஜ்குமாா் மட்டும் மீட்கப்பட்ட சிறிது நேரத்தில் இறந்தாா். அதேபோல கிணற்றில் சிக்கிக் கொண்ட ராதாகிருஷ்ணனும் இறந்தாா். இச்சம்பவத்தில் பணியின்போது வீரமரணமடைந்த தீயணைப்புப் படை வீரா் ராஜ்குமாருக்கு, குடியரசு தின வீரதீர பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, ராஜ்குமாா் குடும்பத்தினருக்கு தமிழக அரசு ரூ.10 லட்சம் கருணைத் தொகையும், தீயணைப்புத்துறையில் பல்வேறு நிலைகளில் உள்ள அதிகாரிகள், ஊழியா்கள் ஆகியோா் தாமாக முன் வந்து ரூ.44.42 லட்சம் நிவாரண நிதியும் வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com