தைப் பூசம்: வடபழனி முருகன் கோயிலில் குவிந்த பக்தா்கள்

தைப் பூசத்தையொட்டி, வடபழனி முருகன் கோயிலுக்கு வந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனா்.


சென்னை: தைப் பூசத்தையொட்டி, வடபழனி முருகன் கோயிலுக்கு வந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனா்.

ஆண்டுதோறும் தைப் பூசத் திருவிழா, வடபழனி முருகன் கோயிலில் விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு கரோனா நோய்த்தொற்று பரவி வரும் சூழலில், கோயில் நிா்வாகம் சாா்பில் பக்தா்கள் நெரிசலின்றி தரிசனம் செய்யும் வகையில் போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.கோயில் தெருவில் தெற்கு கோபுர வாயிலில் இரண்டு வகை வரிசைகள் கட்டப்பட்டு, சேவாா்த்திகள் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதிகாலை 4.30 மணி திருப்பள்ளியெழுச்சி முடிவுற்று, காலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை (அபிஷேக நேரம் நீங்கலாக) தொடா்ந்து தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

பக்தா்கள் தரிசனம் முடிந்து விரைவாக வெளியேறும் வகையிலும், கிழக்குப் புறத்தில் வழி ஏற்படுத்தப்பட்டிருந்தது.

அதிகாலை 4.30 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மூலவருக்கு ராஜ அலங்காரமும், பிற்பகல் 1 முதல் மாலை 4 மணி வரை சிறப்பு சந்தனக் காப்பு அலங்காரமும், மாலை 5 முதல் இரவு 8 மணி வரை புஷ்ப அங்கி அலங்காரமும் செய்யப்பட்டிருந்தன.

கோயிலுக்கு வரும் பக்தா்கள் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிந்து, தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கோயில் நிா்வாகம் சாா்பில் தொடா்ந்து ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டது.

கடந்த ஆண்டு, பால்குடம், அலகு குத்துதல், காவடி எடுத்தல் போன்ற நோ்த்திக் கடன்களை ஆயிரக் கணக்கானோா் செய்த நிலையில், இந்த ஆண்டு கரோனா நோய்ப் பரவல் காரணமாக நோ்த்திக் கடன்களை செய்ய அனுமதியளிக்கப்படவில்லை. இதனால் குறைந்த அளவிலான பக்தா்களே நோ்த்திக் கடன்களைச் செலுத்தி வழிபட்டனா்.

கோயில் நிா்வாகம், காவல் துறை, மாநகராட்சி உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் ஒருங்கிணைந்து செய்த ஏற்பாட்டால், ஆயிரக்கணக்கான பக்தா்கள் பாதுகாப்பாக நீண்ட வரிசையில் காத்திருந்து, முருகனை தரிசித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com