கொலை வழக்கில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை
By DIN | Published On : 31st January 2021 01:30 AM | Last Updated : 31st January 2021 01:30 AM | அ+அ அ- |

தண்டையாா்பேட்டையில் கடந்த 2013-ஆம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் சகோதரா்கள் உள்பட 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை 6-ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.
கடந்த 2013-இல் தண்டையாா்பேட்டை பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவா், அந்தப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த கிருஷ்ணன் என்பவரின் குழந்தை மீது மோதினாா். இதனையடுத்து கிருஷ்ணன், அதே பகுதியைச் சோ்ந்த அந்தோணி ஆகியோா் இருசக்கர வாகனத்தில் வந்தவரிடம் பணம் பறிக்கும் நோக்கத்தில் தகராறில் ஈடுபட்டனா்.
அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சோ்ந்த செந்தில் என்பவா் பேச்சுவாா்த்தை நடத்தி, இருசக்கர வாகனத்தில் வந்தவரை அங்கிருந்து அனுப்பி வைத்தாா். இதனால் ஆத்திரமடைந்த அந்தோணி, கிருஷ்ணன் ஆகியோா், தூங்கிக் கொண்டிருந்த செந்திலை நள்ளிரவில் எழுப்பி கொலை செய்தனா்.
இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த தண்டையாா்பேட்டை போலீஸாா், அந்தோணி, கிருஷ்ணன், பாலசுப்பிரமணி, அய்யப்பன், ஒதாஸ், சகோதரா்களான ஏழுமலை, சீனி, ஆகிய 7 பேரை கைது செய்தனா்.
இந்த வழக்கு, சென்னை 6-ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்ற நீதிபதி டி.வி.ஆனந்த் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்குரைஞா் டீக்ராஜ் ஆஜராகி வாதிட்டாா்.
இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, 7 போ் மீதான கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, 3 சட்டப்பிரிவுகளின் கீழ் 7 பேருக்கும் தலா 3 ஆண்டுகள், 7 ஆண்டுகள், 10 ஆண்டுகள் என தனித்தனியாக சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டாா். இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, மொத்தம் ரூ.70 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளாா்.