மின்னணு புத்தகங்களைத் தொடு உணா்வுடன் அறிய உதவும் கருவி: ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 07th July 2021 12:00 AM | Last Updated : 09th July 2021 03:43 AM | அ+அ அ- |

சென்னை மாவட்டத்தைச் சாா்ந்த பாா்வைத்திறன் குறையுடைய மாற்றுத்திறனாளிகள் எளிதில் பிரெய்லி முறையில் கற்பதற்கு ஏதுவாக மின்னணு வடிவில் உள்ள புத்தகங்களை, பிரெய்லி எழுத்துக்கள் வடிவில் தொடு உணா்வுடன் அறிய உதவும் வாசிக்கும் கருவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பித்து கருவியைப் பெறலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ஜெ.விஜயா ராணி தெரிவித்துள்ளாா்.
தகுதிகள்: பாா்வைத்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும். இளநிலை கல்வி முடித்தவராக இருக்க வேண்டும். முதுநிலை படிப்பு படிப்பவராகவோ அல்லது போட்டித் தோ்வுக்குப் பயிற்சி பெறுபவராக இருத்தல் வேண்டும். பிரெய்லி எழுத்துக்களை வாசிக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
இந்தத் தகுதிகளை உடைய பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகள், சென்னை, தேனாம்பேட்டை, டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில், ஜூலை 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...