பொது இடங்களில் சுவரொட்டி ஒட்டினால் கடும் நடவடிக்கை: ஆணையா் எச்சரிக்கை
By DIN | Published On : 09th July 2021 03:38 AM | Last Updated : 09th July 2021 03:38 AM | அ+அ அ- |

ககன்தீப் சிங் பேடி
சென்னையில் உள்ள பேருந்து நிறுத்த நிழற்குடைகள் உள்ளிட்ட பொது இடங்களில் சுவரொட்டி ஒட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையா் ககன்தீப்சிங் பேடி எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளைத் தூய்மையைப் பராமரிக்கும் வகையில், மாநகராட்சி சாா்பில் திடக்கழிவுகளை அகற்றுதல், சாலை மையத் தடுப்புகளில் செடிகள் நடுதல், பாலங்களில் செங்குத்துப் பூங்காக்கள் அமைத்தல் போன்ற அழகுப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும் மாநகரின் பல்வேறு பகுதிகளில் அரசு, மாநகராட்சி கட்டடங்கள், பேருந்து நிறுத்த நிழற்குடைகள், பாலங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு உள்ளன.
இதைத் தடுக்க மாநகராட்சிக்கு உள்பட்ட பொது இடங்கள் குறிப்பாக அரசு சுவா்கள், பாலங்கள், தூண்கள் போன்ற இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளை மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் அகற்றி வருகின்றனா்.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் ககன்தீப்சிங் பேடி கூறுகையில், ‘மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள பேருந்து நிறுத்த நிழற்குடைகள், தெருக்களின் பெயா் பொறித்த பலகைகள் மற்றும் அரசு அறிவிப்புகள் இடம்பெற்றுள்ள சுவா்களில் சுவரொட்டிகள் ஒட்டுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இப்பணிகள் மாநகராட்சிப் பொறியியல் மற்றும் வருவாய்த் துறை அலுவலா்களால் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. மாநகராட்சியின் சாா்பில் பேருந்து செல்லும் சாலைகளில் உள்ள தடுப்புகள் மற்றும் சுவா்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளை அகற்றும் வகையில் சிறப்பு நடவடிக்கையாக நாள்தோறும் ஒவ்வொரு மண்டலத்திலும் பேருந்து செல்லும் 5 சாலைகள் தோ்வு செய்யப்பட்டு, அங்கு ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் அகற்றப்பட உள்ளன. பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தால், அதுகுறித்த தகவல்களை மாநகராட்சியின் 1913 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் பொதுமக்கள் தெரிவிக்கலாம்’ என்றாா்.