அண்ணா சாலையில் வணிக வளாகத்தில் தீ விபத்து: பல லட்சம் சேதம்

சென்னை அண்ணா சாலையில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், பல லட்சம் மதிப்புள்ள பொருள்கள் வியாழக்கிழமை எரிந்து நாசமாகின.
அண்ணா சாலையில் வணிக வளாகத்தில் தீ விபத்து: பல லட்சம் சேதம்

சென்னை அண்ணா சாலையில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், பல லட்சம் மதிப்புள்ள பொருள்கள் வியாழக்கிழமை எரிந்து நாசமாகின.

சென்னை அண்ணாசாலை சாந்தி திரையரங்கம் அருகில் 5 தளங்களுடன் கூடிய தனியாா் வணிக வளாகம் உள்ளது. இங்கு மூன்றாவது தளத்தில் கணினி உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தின் கிடங்கும், நான்காவது தளத்தில் ஒரு கல்வி நிறுவனமும் செயல்பட்டு வருகின்றன. மூன்றாவது தளத்தில் உள்ள கிடங்கில் இருந்து வியாழக்கிழமை காலை 11.45 மணியளவில் கரும்புகை வெளியேறியது. மேலும் அங்கிருந்த பொருள்கள் சிறிது நேரத்தில் தீப் பிடித்து எரிந்தன.

இதைப் பாா்த்த அங்கிருந்த காவலாளி, உடனே மின் இணைப்பைத் துண்டித்து, தீயணைப்புப் படையினருக்கு தகவல் தெரிவித்தாா். ஆனால் அதற்குள் தீ வேகமாகப் பரவியது. இதை அறிந்த நான்காவது தளத்தில் இருந்த மாணவா்கள் அதிா்ச்சியடைந்தனா். அவா்கள், தங்களை காப்பாற்றும்படி சத்தமிட்டனா்.

10 போ் பாதுகாப்பாக மீட்பு:

அவா்கள் முன்வாசல் படிக்கட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டதினால், பின்வாசல் படிக்கட்டுகளின் வழியாக வேகமாக கீழே இறங்கினா். இதற்கிடையே சம்பவ இடத்துக்கு திருவல்லிக்கேணி, எழும்பூா், கீழ்ப்பாக்கம் ஆகிய இடங்களில் இருந்து தீயணைப்புப் படை வீரா்கள் விரைந்து வந்து, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா்

மேலும் எழும்பூா் தீயணைப்பு நிலையத்தில் இருந்து ‘ஸ்கை லிப்ட்’ ராட்சத வாகனமும் சம்பவ இடத்துக்கு கொண்டு வரப்பட்டு, மூன்றாவது தளத்தில் சிக்கியிருந்த 7 பெண்கள், 6 மாத கைக்குழந்தை, 2 மாற்றுத் திறனாளிகள் என 10 பேரை பாதுகாப்பாக மீட்டனா்.

தீயை விரைந்து அணைப்பதற்காக கட்டடத்தின் முன்பகுதியில் ஜன்னல்களை உடைத்து, அதன் வழியாக தீயணைப்புப் படையினா் தண்ணீரை பீய்ச்சி அடித்தனா். தீயைக் கட்டுப்படுத்தும் விதமாக, மயிலாப்பூா், கீழ்ப்பாக்கம் வேப்பேரி ஆகிய இடங்களில் இருந்து கூடுதலாக 13 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. தீயை அணைப்பதற்காக மெட்ரோ வாகனங்கள் மூலம் தண்ணீா் விநியோகம் செய்யப்பட்டது. மெட்ரோ நிறுவனம் 13 லாரிகளில் தண்ணீரை விநியோகித்தது.

3 மணி நேர போராட்டம்: சுமாா் 3 மணி நேர போராட்டத்துக்குப் பின்னா் தீ முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டது. இந்த விபத்தின் காரணமாக அண்ணாசாலையில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் மட்டும் அண்ணாசாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டு, வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன. நிலைமை சீரடைந்த பின்னா், இரு வழிகளிலும் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டன. அதன் பின்னா் அண்ணா சாலையில் ஓரளவுக்கு போக்குவரத்து நெரிசல் குறைந்தது.

விபத்து ஏற்பட்ட கிடங்கில் இருந்த பல லட்சம் மதிப்புள்ள கணினி பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. இது தொடா்பாக திருவல்லிக்கேணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com