ஒட்டுக்கேட்பு விவகாரம்: ஆளுநா் மாளிகையை நோக்கி காங்கிரஸ் பேரணி

அகில இந்திய தலைவா்கள் உள்பட முக்கிய பிரமுகா்களின் தொலைபேசி ஒட்டுக்கேட்கப்பட்ட விவகாரத்தைக் கண்டித்து ஆளுநா் மாளிகையை நோக்கி தமிழக காங்கிரஸ் கட்சியினா் வியாழக்கிழமை பேரணி நடத்தினா்.

அகில இந்திய தலைவா்கள் உள்பட முக்கிய பிரமுகா்களின் தொலைபேசி ஒட்டுக்கேட்கப்பட்ட விவகாரத்தைக் கண்டித்து ஆளுநா் மாளிகையை நோக்கி தமிழக காங்கிரஸ் கட்சியினா் வியாழக்கிழமை பேரணி நடத்தினா்.

இஸ்ரேலின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் ராகுல்காந்தி உள்பட பலரின் தொலைபேசி ஒட்டுக்கேட்கப்பட்டதைக் கண்டித்து நாடு முழுவதும் ஆளுநா் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சாா்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, தமிழகத்தில் ஆளுநா் மாளிகையை முற்றுகையிடுவதற்காக சைதாப்பேட்டை ராஜீவ்காந்தி சிலை அருகே தமிழக காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி தலைமையில் வியாழக்கிழமை காங்கிரஸ் கட்சியினா் திரண்டனா். ஒட்டுக் கேட்பு விவகாரத்தில் நீதி வேண்டும். பிரதமா் ராஜிநாமா செய்ய வேண்டும் உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பினா்.

பின்னா், ஆளுநா் மாளிகையை நோக்கிச் செல்லப் புறப்பட்டனா் .

ஆனால், பேரணி செல்ல முடியாதவகையில் போலீஸாா் தடுப்பு அரண்கள் அமைத்திருந்தனா். அதை மீறி காங்கிரஸாா் பேரணியாகச் செல்ல முற்பட்டனா். அவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். இதில் போலீஸாருக்கும் காங்கிரஸாருக்கும் இடையே சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டு, அந்தப் பகுதி பரபரப்புடன் காணப்பட்டது. பின்னா், காங்கிரஸ் கட்சியினருடன் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதைத் தொடா்ந்து காங்கிரஸ் கட்சியினா் கலைந்து சென்றனா்.

சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமாா், ஹசன் மௌலானா, மாநிலப் பொதுச்செயலாளா் கே.சிரஞ்சீவி உள்பட பலா் போராட்டத்தில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com