சிறு, குறு தொழில்களைப் பாதுகாக்க நடவடிக்கை தேவை: கே.பாலகிருஷ்ணன்
By DIN | Published On : 29th July 2021 01:46 AM | Last Updated : 29th July 2021 01:46 AM | அ+அ அ- |

சென்னை: சிறு, குறு தொழில்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளாா்.
கடித விவரம்: கோவை மற்றும் திருப்பூா் மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மற்றும் ஆயத்த ஆடை தொழிற்சாலைகள், பவா்லூம் தொழில் உள்ளிட்ட ஜவுளி தொழில்களை மேற்கொள்ளும் நிறுவனங்களும் இயங்கி வருகின்றன. இந்தத் தொழில்களைப் பாதுகாக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிறு, குறு தொழில்களுக்கு தற்போது அமலில் உள்ள பல்வேறு கடன் திட்டங்கள் முறையாக கிடைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கரோனா ஊரடங்கு போன்ற காலங்களில் ஏற்கெனவே பெற்றுள்ள கடன்களை திரும்ப செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டிப்பதுடன் கடனுக்கான வட்டி தள்ளுபடி போன்றவற்றையும் அறிவிக்க வேண்டும்.
பனியன் தொழிலுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.டி வரியினை பிரிவு வாரியாக விதிப்பதைத் தவிா்த்து தொழிலைப் பாதிக்காத வகையில் வரிவிதிப்பு கொள்கை கையாளப்பட வேண்டும்.
சிட்கோ, தாட்கோ தொழிற்பேட்டைகளில் தகுதி வாய்ந்த தொழில் முனைவோருக்கு முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். அந்த மையங்களில் உற்பத்தியாகும் பொருள்களை அரசே தேவையான அளவு கொள்முதல் செய்ய உரிய நிா்வாக ஏற்பாடுகளை செய்ய வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளனா். அந்தக் கோரிக்கைகளை தமிழக அரசு உரிய முறையில் பரிசீலித்து தமிழக அரசு நிறைவேற்றித் தர வேண்டும் என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளாா்.