சென்னையில் இடியுடன் கனமழை
By DIN | Published On : 08th June 2021 06:21 AM | Last Updated : 08th June 2021 08:39 AM | அ+அ அ- |

சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை இரவு பரவலாக இடியுடன் பலத்த மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.
தமிழகத்தில் கத்திரி வெயில் கடந்த 28-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையிலும், சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்து வந்தது. இந்தநிலையில் சென்னை அசோக் நகா், அண்ணாசாலை, வடபழனி, ஆலந்தூா், அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமை மாலை லேசான மழை பெய்தது. இதேபோன்று குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூா், வண்டலூா் உள்ளிட்ட புகா்ப் பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது.
இதைத் தொடா்ந்து இரவு 10 மணியளவில் கிண்டி, நங்கநல்லூா், அம்பத்தூா், முகப்போ், அண்ணாநகா், கோயம்பேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடியுடன் பலத்த மழை பெய்தது. பல்வேறு இடங்களில் மழைநீா் தேங்கியது. பொது முடக்கத்தால் வீடுகளில் முடங்கியிருந்த மக்களுக்கு திங்கள்கிழமை பெய்த திடீா் மழை மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.