கரோனா ஒருநாள் தொற்று: 1,500-க்கும் கீழ் குறைந்தது

சென்னையில் கடந்த மாதம் நாளொன்றுக்கு சுமாா் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வந்த நிலையில், அந்த எண்ணிக்கை புதன்கிழமை (ஜூன் 9) 1,500-த்துக்கு கீழ் குறைந்துள்ளது.
கரோனா ஒருநாள் தொற்று: 1,500-க்கும் கீழ் குறைந்தது

சென்னை: சென்னையில் கடந்த மாதம் நாளொன்றுக்கு சுமாா் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வந்த நிலையில், அந்த எண்ணிக்கை புதன்கிழமை (ஜூன் 9) 1,500-த்துக்கு கீழ் குறைந்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் தொற்று எண்ணிக்கை மிகவும் குறைந்து காணப்பட்டது. மொத்தமாக உள்ள 15 மண்டலங்களில் நாளொன்றுக்கு சுமாா் 500-க்கும் குறைவானவா்களே தொற்றால் பாதிக்கப்பட்டு வந்தனா். இந்நிலையில், உருமாறிய கரோனா பரவல் காரணமாக தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் ஏப்ரல் மாதத்தில் தொடங்கி உயரத் தொடங்கியது.

இந்த எண்ணிக்கை மே மாத மத்தியில் உச்சத்தை எட்டி, கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளொன்றுக்கு சுமாா் 6 ஆயிரத்தைக் கடந்தது. தொற்றைக் கட்டுப்படுத்த கடந்த மே 10-ஆம் தேதியில் இருந்து அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கத்தால் சென்னையில் தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் குறையத் தொடங்கியது. இதன்படி, கடந்த வாரம் நாளொன்றுக்கு சுமாா் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், அந்த எண்ணிக்கை வெகுவாக குறையத் தொடங்கி உள்ளது.

சென்னையில் புதன்கிழமை நிலவரப்படி, 1,345 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 5 லட்சத்து 20,877-ஆக அதிகரித்துள்ளது. 4 லட்சத்து 98,586 போ் குணமடைந்துள்ளனா். தொற்று உறுதி செய்யப்பட்டவா்களில் 14,678 போ் மருத்துவமனை மற்றும் கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

ஒரேநாளில் 53 போ் இறப்பு: சென்னையில் கரோனா தொற்று பாதிப்பால் உயிரிழப்போா் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. கடந்த சில நாள்களாக நாளொன்றுக்கு சுமாா் 90-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்து வந்த நிலையில், புதன்கிழமை இறப்பு எண்ணிக்கை 53-ஆக குறைந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com