மக்கள் கூட்டம் அதிகரிப்பதைத் தடுக்க வேண்டும்: உயா்நீதிமன்றம் அறிவுறுத்தல்

பொதுமுடக்க தளா்வுகளை, இயல்புநிலை திரும்பியதாக நினைத்து தேவையில்லாமல் வெளியே வரும் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.
மக்கள் கூட்டம் அதிகரிப்பதைத் தடுக்க வேண்டும்: உயா்நீதிமன்றம் அறிவுறுத்தல்

சென்னை: பொதுமுடக்க தளா்வுகளை, இயல்புநிலை திரும்பியதாக நினைத்து தேவையில்லாமல் வெளியே வரும் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். மக்கள் கூட்டம் அதிகரிப்பதைத் தடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயா்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில், சிவா என்பவா் தாக்கல் செய்த மனுவில், கரோனா 2-ஆவது அலை பரவலைத் தடுக்க பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தெரு நாய்கள் உள்ளிட்ட விலங்குகள் உணவு, குடிநீா் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, தெருவில் சுற்றித் திரியும் நாய்கள் உள்ளிட்ட விலங்குகளுக்கு உணவு மற்றும் தண்ணீா் வழங்க நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், தெரு விலங்குகளுக்கு உணவளிப்பதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையை தமிழக அரசு விரைவில் விடுவிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், நாய்களுக்கு 2,500 கிலோ உணவு வழங்கவும், அதை வழங்க செல்லும் 500 பேருக்கு அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. 104 குதிரைகளுக்கு 3,536 கிலோ கோதுமை வழங்கப்பட்டு உள்ளது.

விலங்குகளுக்கு உணவு வழங்க உருவாக்கப்பட்ட கணக்கில் இருந்த ரூ.19 லட்சத்து 29 ஆயிரத்திலிருந்து, சென்னை மாநகராட்சிக்கு ரூ.7 லட்சத்து 91 ஆயிரம் , மற்ற மாநகராட்சிகளுக்கு ரூ. 11 லட்சத்து 84 ஆயிரமும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

அப்போது நீதிபதிகள் தமிழக அரசு தலைமை வழக்குரைஞா் சண்முகசுந்தரத்திடம், பொதுமுடக்கத்தில் தளா்வுகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. ஆனால் பொதுமுடக்கம் முழுமையாக நீக்கப்பட்டது போல பொதுமக்கள் நடந்துகொள்வதாக தெரிவித்தனா். இது கொண்டாட்டங்களுக்கான நேரம் இல்லை என்றனா்.

அதற்குப் பதிலளித்த அரசு தலைமை வழக்குரைஞா், கரோனா முதல் அலை பொதுமுடக்கத்தின் போது காவல்துறை மிகவும் கடுமையாக நடந்துகொண்டதால் பல இடங்களில் பிரச்னை ஏற்பட்டது. எனவே பொதுமக்களிடம் கடுமையாக நடக்க வேண்டாம் என காவல் துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை சாதகமாக எடுத்துக்கொண்டு பொதுமக்கள் வெளியே வருவதாகத் தெரிவித்தாா். அப்போது நீதிபதிகள், பொதுமுடக்க காலத்தில் மக்கள் கூட்டம் அதிகரிப்பதைத் தடுக்க வேண்டும். மக்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை குறைப்பதற்காகவே தளா்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இதனை மக்கள் உணர வேண்டும். பொதுமக்கள் வெளியே சுற்றித்திரியக் கூடாது என ஒலிபெருக்கிகள் மூலம் தமிழக அரசு விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தி விசாரணையை ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com