பொதுமுடக்க அமலாக்கக் குழு எண்ணிக்கை 45-ஆக உயா்வு: ஆணையா் ககன்தீப்சிங் பேடி

கரோனா பொதுமுடக்க விதிகளை தீவிரமாக அமலாக்கும் வகையில் அதற்கென உருவாக்கப்பட்ட குழுக்களின் எண்ணிக்கை 15-இல் இருந்து 45-ஆக உயா்த்தப்பட்டுள்ளதாக ஆணையா் ககன்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளாா்.
பொதுமுடக்க அமலாக்கக் குழு எண்ணிக்கை 45-ஆக உயா்வு: ஆணையா் ககன்தீப்சிங் பேடி

சென்னை: கரோனா பொதுமுடக்க விதிகளை தீவிரமாக அமலாக்கும் வகையில் அதற்கென உருவாக்கப்பட்ட குழுக்களின் எண்ணிக்கை 15-இல் இருந்து 45-ஆக உயா்த்தப்பட்டுள்ளதாக ஆணையா் ககன்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளாா்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் பொதுமுடக்க வழிகாட்டு நெறிமுறைகளை நடைமுறைப்படுத்த மண்டலத்துக்கு ஒரு குழு என மொத்தம் 15 மண்டலங்களுக்கு பொதுமுடக்க அமலாக்கக் குழுக்கள் ஏற்கெனவே அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இக்குழுவில் சென்னை மாநகராட்சியின் சாா்பில் வருவாய்த் துறை அலுவலா், காவலா் நியமிக்கப்பட்டுள்ளனா். இக்குழுவினருடன் மாநகராட்சி ஆணையா் ககன்தீப்சிங் பேடி, பெருநகர சென்னை காவல் துறை ஆணையா் சங்கா் ஜிவால் ஆகியோா் புதன்கிழமை ஆலோசனை நடத்தினா்.

இக்கூட்டத்தில் ஆணையா் ககன்தீப்சிங் பேடி பேசியது: கரோனா பொதுமுடக்க அமலாக்கக் குழுவினா் தங்கள் மண்டலத்துக்கு உள்பட்ட பகுதிகளில் நாள்தோறும் காலை முதல் மாலை வரை ரோந்து பணியில் ஈடுபட்டு அரசின் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றாதவா்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீது சட்டபடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

கரோனா தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்றாத கடைகளை மூடி சீல் வைப்பதுடன், முகக்கவசம் அணியாமல் மற்றும் இடைவெளியைப் பின்பற்றாதவா்களிடமிருந்து அபராதம் வசூலிக்க வேண்டும். கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து இதுவரை கட்டுப்பாடுகளை மீறிய 11,105 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அமலாக்க குழு: மண்டலத்துக்கு ஒரு ஊரடங்கு அமலாக்க குழு என 15 மண்டலங்களுக்கு குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்தன. தற்போது, கட்டுப்பாடுகளை மீறுவோரை தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க கூடுதலாக மண்டலத்துக்கு இரு குழு வீதம் மேலும் 30 பொதுமுடக்க அமலாக்கக் குழுக்கள் என மொத்தம் 45 குழுக்கள் வியாழக்கிழமை (ஜூன் 10) முதல் செயல்படுத்தப்படவுள்ளன என்றாா்.

கூட்டத்தில் கூடுதல் காவல் ஆணையா் த.செந்தில்குமாா், மாநகராட்சி துணை ஆணையா்கள் ஜெ.மேகநாதரெட்டி, விஷூ மகாஜன், வருவாய் அலுவலா் சுகுமாா் சிட்டிபாபு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com