21 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது: மாநகராட்சி ஆணையா் ககன்தீப்சிங் பேடி
By DIN | Published On : 11th June 2021 06:42 AM | Last Updated : 11th June 2021 06:42 AM | அ+அ அ- |

ககன்தீப் சிங் பேடி
சென்னையில் இதுநாள் வரை 21 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையா் ககன்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளாா்.
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் கரோனா தொற்று பாதித்தவா்களுக்கு சிகிச்சை அளிக்கவும் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தவும் மாநகராட்சி சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அரசின் வழிகாட்டுதல்படி முதற்கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கும் , தொடா்ந்து 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோயுள்ளவா்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
அத்துடன் மருத்துவப் பணியாளா்கள், முன் களப்பணியாளா்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் தோ்தல் பணியில் ஈடுபட்ட பணியாளா்கள் என முன்னுரிமை அளிக்கப்பட்டு அவா்களுக்கும் தடுப்பூசி செலுத்த சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டன.
இதைத் தொடா்ந்து 18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு தடுப்பூசி வழங்கலாம் என மத்திய அறிவித்துள்ள நிலையில் தற்போதைய தடுப்பூசி இருப்பினை கருத்தில்கொண்டு 18 வயதுக்கு மேற்பட்டவா்களில் அத்தியாவசியப் பணிகளில் ஈடுபடுவோருக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது.
21 லட்சம் பேருக்கு தடுப்பூசி: இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் ககன்தீப் சிங் பேடி கூறுகையில், மாநகராட்சிக்கு உள்பட்ட 110 நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், 20 நகா் நல மையங்கள், 11 அரசு மருத்துவமனைகள், 175 தனியாா் மருத்துவமனைகள் ஆகியவற்றில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் இதுநாள் வரை 15 லட்சத்து 59,783 பேருக்கு முதல் தவணைத் தடுப்பூசியும், 5 லட்சத்து 86,897 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. புதன்கிழமை வரை 21லட்சத்து 46,680 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதில் 45 வயதுக்கு மேற்பட்டவா்களில் 66.31 சதவீதமாகும்.
கோயம்பேடு வணிக வளாகத்தில் அமைக்கப்பட்ட சிறப்பு தடுப்பூசி முகாமில் இதுவரை 8,239 பேருக்கும், காசிமேடு மீன்பிடி துறைமுக வளாகத்தில் 2143 பேருக்கும், சிந்தாதிரிப்பேட்டையில் அமைக்கப்பட்ட சிறப்பு மருத்துவ முகாமில் 89 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.