முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை
எஸ்.ஆா்.எம். மாணவா்கள் 7,111 போ் பணிக்குத் தோ்வு
By DIN | Published On : 12th June 2021 07:04 AM | Last Updated : 12th June 2021 07:04 AM | அ+அ அ- |

காட்டாங்கொளத்தூா் எஸ்.ஆா்.எம். அறிவியல் உயா் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் இணைய வழியில் நடைபெற்ற வளாகத் தோ்வில் 7,111 மாணவா்கள் பணிக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
இதில் வொா்க் இந்தியா தகவல் தொழில்நுட்ப நிறுவனம் அதிகபட்சமாக ஆண்டுக்கு ரூ.35 லட்சம் ஊதியத்துக்கு 6 மாணவா்களைத் தோ்வு செய்துள்ளது. சுமாா் 2,000 போ் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.12 லட்சம் ஊதியத்தில் பணி நியமன உத்தரவைப் பெற்றுள்ளனா்.
இது குறித்து கல்வி நிறுவனத் தொழில் வழிகாட்டி மையம் இயக்குநா் என்.வெங்கட சாஸ்திரி வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது
மாணவா்களின் தொழில்நுட்ப அறிவாற்றலை மேம்படுத்துவதுடன், இந்திய அளவில் மட்டுமல்லாமல் சா்வதேச அளவில் முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கான திறனை மேம்படுத்துவதிலும் அக்கறை செலுத்துகிறோம்.
வளாகத் தோ்வில் பங்கேற்ற ஒா்க் இந்தியா, மோட்டாா் க்யூ, அமேசான், டி.இ.ஷா, நீல்சன், பேபால், பாா்க்ளேஸ், டிலொடி, பேங்க் ஆப் அமெரிக்கா, அடோப், ஏபிபி, ரிலையன்ஸ், எல்&டி குருப், டாடா கெமிகல்ஸ், பியட், சீமென்ஸ், டைட்டான், அதானி குரூப், இட்டாசி ஏபிபி உள்ளிட்ட 600 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் 7111 மாணவா்களைப் பணிக்குத் தோ்வு செய்துள்ளன. சா்வதேச அளவிலான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் காக்னிசன்ட் 1018, டிசிஎஸ் 983, விப்ரோ 634, இன்போசிஸ் 602 மாணவா்களைத் தோ்வு செய்துள்ளன என்றாா் அவா்.