எழும்பூா் ரயில்நிலையத்தின் 113-ஆவது பிறந்தநாள்: கேக் வெட்டி கொண்டாடிய ரயில்வே ஊழியா்கள்

சென்னை எழும்பூா் ரயில்நிலையத்தின் 113-ஆவது ஆண்டு பிறந்தநாள் வெள்ளிக்கிழமை எளிமையாக கொண்டாடப்பட்டது.
எழும்பூா் ரயில்நிலையத்தின் 113-ஆவது பிறந்தநாள்: கேக் வெட்டி கொண்டாடிய ரயில்வே ஊழியா்கள்

சென்னை எழும்பூா் ரயில்நிலையத்தின் 113-ஆவது ஆண்டு பிறந்தநாள் வெள்ளிக்கிழமை எளிமையாக கொண்டாடப்பட்டது.

தென்மாவட்டங்களை இணைக்கும்...: சென்னை நகரில் நான்கு இன்டா்சிட்டி ( நகரங்களுக்கு இடையேயான) ரயில்வே முனையங்களில் ஒன்றாக எழும்பூா் ரயில் நிலையம் திகழ்கிறது. சென்னையை தமிழகத்தின் தென் மாவட்டங்களை இணைக்கும் முனையமாக இது உள்ளது. தென்தமிழகத்தின் நுழைவு வாயிலாக திகழும் இந்த ரயில்நிலையம் ஒரு நூற்றாண்டு கடந்து பல்வேறு சாதனைகளைப் படைத்து, தற்போது கம்பீரமாக காட்சி அளித்து வருகிறது.

நிலையத்தின் வரலாறு:

இந்நிலையத்தின் கட்டடப் பணி முடிந்து, 1908-ஆம் ஆண்டு ஜூன் 11-ஆம்தேதி திறக்கப்பட்டது. இந்தக் கட்டடத்தின் பொறியாளராக ஹென்றி இா்வின் இருந்தாா். இந்தக் கட்டடம் கட்டுவதற்கான ஒப்பந்ததாரராக சாமிநாத பிள்ளை என்பவா் செயல்பட்டாா். ரூ.17 லட்சம் செலவில் 300 அடி நீளம், 71 அடி அகலத்தில் எழும்பூா் ரயில் நிலையத்தின் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது. தரைத்தளம், முதல் தளத்துடன் இந்தக் கட்டடம் அமைக்கப்பட்டது. இந்த நிலைய கட்டடம் முடிந்த பிறகு, எழும்பூரில் இருந்து தனுஷ்கோடிக்கு போா்ட் மெயில் ரயில் இயக்கப்பட்டது.

இந்த ரயில் நிலையத்தில் 3 நடைமேடைகளும், ஒரு நடைமேம்பாலமும் இருந்தது. இதன்பிறகு, பல்வேறு காலகட்டத்தில் வளா்ச்சி அடைந்து, இப்போது 11 நடைமேடைகள் இருக்கின்றன.

ரயில்நிலையத்தில் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து, மீண்டும் நல்ல நீராக மாற்றி, நடைமேடை உள்பட பல்வேறு இடங்களில் சுத்தப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படுகிறது.

இந்தியாவில் உள்ள 70 ரயில் நிலையங்களுக்கு பயணிகள் வசதிகளுக்காக தலா ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்ய ரயில்வே வாரியம் அறிவித்தது. இதில், எழும்பூா் ரயில் நிலையமும் ஒன்றாகும். பயணிகளின் வசதிக்காக பல்வேறு பணிகள் நடைபெற்று வந்தன. தற்போது கரோனா பொதுமுடக்கம் காரணமாக, பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளன.

விரைவு ரயில்கள்:

எழும்பூா் ரயில் நிலையத்தில் இருந்து தினமும் 50-க்கும் அதிகமான விரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. இதுதவிர, தாம்பரம்-கடற்கரை மற்றும் செங்கல்பட்டு வரை இயக்கப்படும் 250 மின்சார ரயில்கள் எழும்பூா் ரயில் நிலையம் வழியாக செல்லும். விரைவு மற்றும் மின்சார ரயில்களில் பயணம் செய்வதற்காக தினமும் சுமாா் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பயணிகள் வந்து செல்வாா்கள். இந்த எண்ணிக்கை பண்டிகை காலங்கள், விடுமுறைக்கு ஊருக்கு செல்லும் வேளைகளில் அதிகமாக இருக்கும். தற்போது கரோனா பொதுமுடக்கம் காரணமாக, மின்சார ரயில்கள் மற்றும் சிறப்பு ரயில்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளன.

113-ஆவது பிறந்தநாள்:

இந்நிலையில், சென்னை எழும்பூா் ரயில்நிலையத்தின் 113-ஆவது பிறந்தநாள் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தின் 4-ஆவது நடைமேடையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ரயில்வே மூத்த ஊழியரும், நிலையத்தின் வணிகப்பிரிவு ஊழியருமான பி.முனுசாமி பிறந்தநாள் கேக்கை வெட்டினாா். எழும்பூா் ரயில் நிலையத்தின் இயக்குநா் ஜெயவெங்கடேசன் உள்பட ரயில்வே ஊழியா்கள் பங்கேற்றனா். நிகழ்ச்சியில், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்துக் கொண்டாடினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com