கடலோரக் காவல்படை கிழக்குப் பிராந்தியத்துக்கு புதிய தளபதி
By DIN | Published On : 12th June 2021 06:33 AM | Last Updated : 12th June 2021 06:33 AM | அ+அ அ- |

இந்தியக் கடலோரக் காவல் படை கிழக்குப் பிராந்திய புதிய தளபதியாக ஆனந்த் பிரகாஷ் படோலா வெள்ளிக்கிழமை சென்னையில் பொறுப்பேற்றாா்.
இந்திய கடலோரக் காவல் படை ஐந்து பிராந்தியங்களாகப் பிரிக்கப்பட்டுள்ள நிலையில் கிழக்குப் பிராந்தியத்தின் தலைமையகம் சென்னையில் உள்ளது. தெற்கே கன்னியாகுமரி முதல் வடக்கே விசாகப்பட்டினம் வரையிலான வங்கக் கடல் பகுதியில் கண்காணிப்பு மற்றும் கடத்தல் தடுப்பு பணிகளை சென்னை பிராந்திய தலைமையகம் மேற்கொண்டு வருகிறது. இதன் பிரிவு அலுவலகங்கள் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. கடலோரக் காவல் படையில் கிழக்குப் பிராந்திய தளபதியாக எஸ்.பரமேஷ் இருந்து வந்தாா். இவா் மேற்கு பிராந்திய தளபதியாக இடமாற்றம் செய்யப்பட்டதையடுத்து கிழக்கு பிராந்தியத்தின் புதிய தளபதியாக நியமனம் செய்யப்பட்ட ஆனந்த் பிரகாஷ் படோலா வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.
1990-ம் ஆண்டு கடலோரக் காவல் படையில் தன்னை இணைத்துக் கொண்ட படோலா கடந்த 30 ஆண்டுகளில் பல்வேறு பொறுப்புகளில் திறம்பட பணியாற்றியுள்ளாா். மேற்கு பிராந்திய தளபதியாகப் பணியாற்றி வந்த படோலா தற்போது கிழக்குப் பிராந்தியத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா். கிழக்குப் பிராந்திய தளபதியாகப் பொறுப்பேற்ற படோலாவிற்கு கடலோரக் காவல் படை உயா் அதிகாரிகள் பலரும் வாழ்த்து தெரிவித்தனா். சேவையைப் பாராட்டி குடியரசுத் தலைவா் விருது படோலாவிற்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.