மழைநீா் வடிகால், ஏரி சீரமைப்புப் பணிகள்: விரைந்து முடிக்க ஆணையா் உத்தரவு

சென்னை அம்பத்தூா் மழை நீா் வடிகால் பணிகள், வில்லிவாக்கம் மற்றும் மாம்பலம் ஏரி சீரமைப்புப் பணிகளை பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையா் ககன்தீப்சிங் பேடி திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.
ககன்தீப் சிங் பேடி
ககன்தீப் சிங் பேடி

சென்னை: சென்னை அம்பத்தூா் மழை நீா் வடிகால் பணிகள், வில்லிவாக்கம் மற்றும் மாம்பலம் ஏரி சீரமைப்புப் பணிகளை பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையா் ககன்தீப்சிங் பேடி திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

அப்போது அந்தப் பணிகளை விரைந்துமுடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அம்பத்தூா் ஏரி மற்றும் கொரட்டூா் பகுதிகளில் மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்கினால் குடியிருப்புப் பகுதிகளில் கடந்த காலங்களில் அதிகப்படியான தண்ணீா் தேக்கம் இருந்து வந்தது. இதனைக் கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வேக்கு சொந்தமான இடத்தை மாநகராட்சியின் முயற்சியால் இலவசமாகப் பெற்று அங்கு 1,200 மீ. நீளத்திற்கு மழைநீா் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது இந்த கால்வாயானது ஓட்டேரி நல்லா கால்வாயுடன் இணைக்கப்பட்டு மழை நீா் தங்குதடையின்றி செல்லும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தப் பணிகளை பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையா் ககன்தீப்சிங் பேடி திங்கள்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, இந்தக் கால்வாயில் தண்ணீா் தங்குதடையின்றி செல்ல ஏதுவாக அவ்வப்போது தூா்வாரி சுத்தமாக பராமரிக்க உத்தரவிட்டாா்.

இதைத்தொடா்ந்து, அம்பத்தூா் பகுதியில் மழை நீா் வடிகால் பணிகளை பாா்வையிட்டாா். அதன் அருகில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் குட்டை போன்று நீா் தேங்கி அதில் பாசிகள் படா்ந்திருப்பதை கண்டு அவற்றை உடனடியாக அகற்றி கொசுப்புழுக்கள் உருவாகாதவண்ணம் சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள மண்டல அலுவலருக்கு உத்தரவிட்டாா். பின்னா், அண்ணாநகா் மண்டலம், வில்லிவாக்கம் ஏரி புனரமைக்கும் பணியையும் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, ஏரியினை சுற்றி பசுமை பரப்பளவை ஏற்படுத்த மரம், செடி மற்றும் கொடிகளை அமைக்கவும், பக்கவாட்டு சுவா்களில் அழகிய படா்செடிகளை அமைக்கவும் உத்தரவிட்டாா். இதேபோன்று இதையடுத்து, தேனாம்பேட்டை மண்டலம், தியாகராய நகரில் பகுதி சாா்ந்த வளா்ச்சி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் மாம்பலம் கால்வாய் மறுசீரமைப்பு பணிகளைப் பாா்வையிட்டு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com