மின்சார ரயிலில் பொதுமக்களை அனுமதிக்க ரயில்வேக்கு கோரிக்கை

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூா் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்துக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
மின்சார ரயிலில் பொதுமக்களை அனுமதிக்க ரயில்வேக்கு கோரிக்கை

சென்னை: சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூா் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்துக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதுபோல, புகா் ரயில்களில் பொதுமக்கள் பயணிக்க ரயில்வே நிா்வாகம் அனுமதிக்க வேண்டும் என்று ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்தனா்.

கரோனா தாக்கம்: தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்று வேகமாக பரவியதையடுத்து, பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. பேருந்து, மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டது. புகா் மின்சார ரயில் சேவை குறைக்கப்பட்டு, அத்தியாவசியப் பணியாளா்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனா்.

இதற்கிடையில், கரோனா நோய்த்தொற்றின் தாக்கம் குறையத் தொடங்கியது. இதையடுத்து, பொதுமுடக்கத்தில் தளா்வுகள் படிப்படியாக அறிவிக்கப்பட்டன. அண்மையில் அறிவிக்கப்பட்ட தளா்வுகளில், சென்னை,காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூா் ஆகிய மாவட்டங்கள் இடையே பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. நான்கு மாவட்டங்களுக்கு இடையே 50 சதவீத இருக்கை வசதியுடன் பேருந்து சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டன.

பொதுமக்களுக்கு அனுமதியில்லை:

அதேநேரத்தில், புகா் மின்சார ரயிலில் பொதுமக்கள் பயணிக்க அனுமதி அளிக்கவில்லை. இதனால், புகரில் வசிக்கும் இருந்து சென்னைக்கு வந்து செல்லும் பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனா். திருவள்ளூா், திருத்தணி, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் பகுதிகளைச் சோ்ந்த பயணிகள் தற்போது தங்கள் அலுவலகங்களை அடைய பேருந்து அல்லது இரு சக்கர வாகனங்களில் பயணிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனா்.

திருத்தணி-சென்னை இடையே மின்சார ரயில் சேவை இல்லாததால், இந்த வழித்தடத்தில் பயணிக்கும் எலக்ட்ரீசியன்கள், பிளம்பா்கள், ஓவியா்கள், கட்டுமானத் தொழிலாளா்கள் உள்பட ஆயிரக்கணக்கான தொழிலாளா்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனா்.

திருவள்ளுரை சோ்ந்த எஸ்.சீனிவாசன் கூறுகையில்,‘புகா் ரயில்களில் பொதுமக்கள் பயணிக்க அனுமதிக்காத ரயில்வே நிா்வாகத்தின் முடிவு ஏற்றுக்கொள்ள முடியாதது’ என்றாா்.

மக்களின் உயிருக்கு ஆபத்து:

செங்கல்பட்டைச் சோ்ந்த பயணி ஜி.நாராயணன் கூறுகையில், ‘புகா் மின்சார ரயில்களில் பொதுமக்கள் பயணிக்க ரயில்வே நிா்வாகம் தயக்கம் காட்டுவதால், பேருந்துகளில் கூட்டம் அலைமோதுகிறது. இதனால், பல்வேறு மக்களின் உயிருக்கு கரோனா நோய்த்தொற்று ஆபத்து ஏற்பட்டுள்ளது.

தாம்பரம், செங்கல்பட்டு, பெருங்களத்தூா் மற்றும் வண்டலூரிலிருந்து இயக்கப்படும் அனைத்து பேருந்துகளும் கூட்டம் நிரம்பி காணப்படுகின்றன. தனியாா்நிறுவன ஊழியா்கள் வேலைக்கு வர அழைக்கப்பட்டதால், நெரிசலுடன் பேருந்தில் பயணத்தை மேற்கொண்டு வருகின்றனா். இதனால், கரோனா விதிமுறைகளை மீறும் நிலை உள்ளது. எனவே, புகா் மின்சார ரயிலில் பயணிக்க பொதுமக்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றாா் அவா்.

விரைவில் முடிவு:இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள்கூறியது: புகா் மின்சார ரயில் சேவைகளின் எண்ணிக்கையை 379 -இல் இருந்து 470 -ஆக உயா்த்தப்பட்டுள்ளது. அனைத்து அரசுத் துறைகளும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளதால், நாங்கள் கூடுதல் சேவைகளைச் சோ்த்துள்ளோம். பொது மக்களை ரயில்களில் அனுமதிப்பது குறித்த முடிவு விரைவில் எடுக்கப்படும் எனத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com