25% இட ஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கை

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி எந்தவிதக் கட்டணமும் இல்லாமல் தனியார் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு அல்லது எல்கேஜி வகுப்பில் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் குழந்தைகளுக்குச் சேர்க்கை பெற வரும்
25% இட ஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கை

சென்னை:  கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி எந்தவிதக் கட்டணமும் இல்லாமல் தனியார் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு அல்லது எல்கேஜி வகுப்பில் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் குழந்தைகளுக்குச் சேர்க்கை பெற வரும் ஜூலை 5-ஆம் தேதி முதல் ஆக. 3-ஆம் தேதி வரை இணையவழியில் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து பள்ளிக் கல்வித்துறைச் செயலர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள அறிவிப்பு:   குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-இன் படி, சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் குழந்தைகளை 25 சதவீத இடங்களில் சேர்க்க வேண்டுமென 2013-ஆம் ஆண்டு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஆண்டுதோறும் மாணவர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.
எல்கேஜி அல்லது ஒன்றாம் வகுப்பில்... அந்தவகையில் தற்போது நிகழாண்டு மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  கரோனா பரவலைக் கருத்தில் கொண்டு தனியார் பள்ளிகள்  இணையவழியில்  விண்ணப்பங்களை பெற்று,  கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி நுழைவு நிலை வகுப்புகளில் 2021-22-ஆம் கல்வி ஆண்டுக்கான சேர்க்கையை நடத்த வேண்டும். தனியார் பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் உள்ள இடங்கள் குறித்த விவரங்களை ஜூன் 24-ஆம் தேதி முதல் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் பெறவேண்டும்.  இதையடுத்து 25 சதவீத இட ஒதுக்கீட்டில் நிரப்பப்பட உள்ள எண்ணிக்கைகளின் விவரங்களை தனியார் பள்ளிகள் அறிவிப்பு பலகையிலும், பள்ளிக்கல்வித் துறை அதன் இணையதளத்திலும் ஜூலை 3-ஆம் தேதி வெளியிடவேண்டும். 
எங்கிருந்து வேண்டுமானாலும்...:  இதைத் தொடர்ந்து குழந்தைகளைச் சேர்க்க விரும்பும் பெற்றோர் ஜூலை 5-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 3-ஆம் தேதி வரை இணையவழியில்  (ழ்ற்ங்.ற்ய்ள்ஸ்ரீட்ர்ர்ப்ள்.ஞ்ர்ஸ்.ண்ய்) எங்கிருந்து வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். மேலும் முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர், வட்டாரக் கல்வி அலுவலர், அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வள மைய அலுவலகங்களில் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை இணையவழியில் விண்ணப்பிக்கத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். 
ஒப்புகைச் சீட்டு அவசியம்:  அந்தந்தப் பள்ளிகளில்  விண்ணப்பங்கள் ஏதேனும் வழங்கப்பட்டால் சம்பந்தப்பட்ட பெற்றோர்களுக்கு ஒப்புகைச் சீட்டு உடனடியாக தவறாமல் வழங்கப்பட வேண்டும். அந்த விண்ணப்பங்களை பள்ளியிலேயே இணையவழியில் பதிவேற்றம் செய்யலாம். அல்லது அருகில் உள்ள வட்டார, மாவட்டக் கல்வி அலுவலகங்களில் கொடுத்து பதிவேற்றம் செய்யலாம்.
ஆகஸ்ட் 10-ஆம் தேதி அளவில் பள்ளியில் உள்ள இடங்களுக்கு மேல் மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தால் குலுக்கல் முறையில் தேர்வு செய்ய வேண்டும். பள்ளிகளில் உள்ள இடங்களைவிட குறைவாக விண்ணப்பித்து இருந்தால் அவர்களைத் தேர்வு செய்து மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும். இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர்கள் சேர்க்கப்பட்ட விவரங்களை ஆகஸ்ட் 14-ஆம் தேதி மாவட்ட கல்வி அதிகாரியிடம் தனியார் பள்ளிகள் ஒப்படைக்க வேண்டும். 

பள்ளிகளின் முன்புறம் அறிவிப்புப் பலகை 

மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு மக்களிடையே சென்றடையும் வகையில் அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளிலும் பள்ளியில் பிரதான நுழைவாயிலில் பொதுமக்களுக்கு நன்கு தெரியும் வகையில் பள்ளிப் பெயர்ப் பலகைக்கு அருகிலும், பொதுமக்கள் பெருமளவில் கூடும் இடங்களிலும் கடந்த ஆண்டுகளில் வைக்கப்பட்டது போன்று அனைத்து விவரங்களையும் உள்ளடக்கிய அறிவிப்புப் பலகை (பேனர்கள்) வைக்கப்பட வேண்டும்.   விண்ணப்பித்த மாணவர்களில் தகுதியான மாணவர்களின் விவரங்களை பள்ளிகள் தங்களது அறிவிப்புப் பலகையிலும், பள்ளிக்கல்வித்துறையின் இணையதளத்திலும் ஆகஸ்ட் 9-ஆம் தேதி வெளியிட வேண்டும் என செயலர் காகர்லா உஷா தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com