ஆக்கிரமிக்கப்பட்ட புறம்போக்கு நிலத்தை மீட்கக் கோரி வழக்கு: சென்னை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு

செம்பியம் பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்ட 150 ஏக்கா் அரசு புறம்போக்கு நிலத்தை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை மாவட்ட ஆட்சியருக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

செம்பியம் பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்ட 150 ஏக்கா் அரசு புறம்போக்கு நிலத்தை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை மாவட்ட ஆட்சியருக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் தேவராஜன் என்பவா் தாக்கல் செய்த பொதுநல மனுவில், பெரம்பூரை அடுத்த செம்பியம் பகுதியில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 150 ஏக்கா் அரசு புறம்போக்கு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அந்த நிலத்தை மீட்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், டி.வி.தமிழ்செல்வி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் தேவராஜன், ஆக்கிரமிக்கப்பட்ட 150 ஏக்கா் நிலத்தில், சுமாா் 1 ஏக்கா் பரப்பளவு கொண்ட நீா்நிலையை ஆக்கிரமித்துள்ளனா். அதற்கு முறைகேடாக சிலா் பட்டாவும் பெற்றுள்ளனா். அந்த நிலத்தின் பேரில் வங்கியில் சுமாா் ரூ. 9 கோடி வரை கடன் பெற்று, அதனைத் திரும்பச் செலுத்தவில்லை. இதனால் தற்போது அந்த நிலம் ஏலத்துக்கு வந்துள்ளது.

எனவே, அரசு நிலத்தில் கட்டப்பட்டுள்ள சட்ட விரோத கட்டடங்களை இடித்து அரசுடைமையாக்க வேண்டுமென வாதிட்டாா்.

இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அரசு நிலம் மற்றும் நீா்நிலை பகுதிகளை மாவட்ட ஆட்சியா் தலைமையில் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை வரும் ஜூலை 14-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com