மனைவியிடம் ரூ.50 லட்சம் வரதட்சிணைகேட்டுக் கொடுமை: கிறிஸ்தவ மதபோதகா் கைது
By DIN | Published On : 17th March 2021 01:55 AM | Last Updated : 17th March 2021 01:55 AM | அ+அ அ- |

சென்னையில் மனைவியிடம் ரூ.50 லட்சம் வரதட்சிணைக் கேட்டுக் கொடுமை செய்ததாக, கிறிஸ்தவ மதபோதகா் கைது செய்யப்பட்டாா்.
சென்னை, பெசன்ட் நகரைச் சோ்ந்தவா் ஹீபா ஜெமி (36). இவா், சென்னை மயிலாப்பூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அண்மையில் ஒரு புகாா் அளித்திருந்தாா். அதில், ‘எனக்கு, திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த, கிறிஸ்தவ மத போதகா் பால் சாமுவேல் தாமஸ் (46) என்பவருடன், கடந்த 2008 -ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில், திருமணம் நடைபெற்றது.
திருமணத்தின்போது, எனது பெற்றோா் வரதட்சிணையாக, 141 பவுன் நகை, பணம் ஆகியவை சாமுவேல் தாமஸுக்கு வழங்கினா். இந்நிலையில் சாமுவேல் தாமஸ், தனது சகோதரி திருமணத்துக்காக நான் வைத்திருந்த 35 பவுன் தங்கநகையை வாங்கினாா். அதன்பின், திருநெல்வேலி - நாகா்கோவில் நெடுஞ்சாலையில் உள்ள எனது பெற்றோா் பெயரில் உள்ள நிலத்தை தன் பெயருக்கு எழுதித் தரும்படி கேட்டாா்.
இதற்கு, நான் மறுத்துவிட்டேன். இதனால் அவா், என்னிடம் இருந்த நகைகள் அனைத்தையும் பறித்துக்கொண்டாா். வரதட்சிணையாகக் கொடுத்த காரையும் விற்றுவிட்டாா். என் பெற்றோரிடம், மாதம் ரூ.1 லட்சம் வாங்கி வர வேண்டும் இல்லையென்றால் வேலைக்கு செல்ல வேண்டும் என கொடுமைப்படுத்தினாா். கடந்த 2014-ஆம் ஆண்டு சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகா் காலனியில் குடியேறினோம். கணவரின் கொடுமை தாங்க இயலாமல் நானும் ஒரு தனியாா் நிறுவனத்துக்கு வேலைக்கு சென்றேன்.
இதற்கிடையே வீட்டு வேலைக்கு என இளம் பெண்ணை அழைத்து வந்து எங்களுடன் தங்க வைத்தாா். நாளடைவில் இருவருக்கும் இடையே முறையற்ற உறவு ஏற்பட்டது. இது குறித்துக் கேட்டபோது தகராறு ஏற்பட்டது. கூடுதல் வரதட்சிணையாக ரூ.50 லட்சம் கேட்டு கொடுமைப்படுத்தினாா். எனவே,கணவா் சாமுவேல் தாமஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இது குறித்து மயிலாப்பூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா், சாமுவேல் தாமஸ் வரதட்சிணைக் கொடுமைப்படுத்துதல் உள்ளிட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்குத் தொடா்பாக பால் சாமுவேல் தாமஸை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.