பாதாள சாக்கடைகளில் விஷவாயு தாக்கி பலியாகும் சம்பவம்: மாநகராட்சி, நகராட்சி ஆணையா்களுக்கு உயா்நீதிமன்றம் கண்டனம்

பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுபவா்கள் விஷ வாயு தாக்கி இறந்தால் மாநகராட்சி, நகராட்சி ஆணையா்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுத்தால் என்ன? என உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுபவா்கள் விஷ வாயு தாக்கி இறந்தால் மாநகராட்சி, நகராட்சி ஆணையா்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுத்தால் என்ன? என உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழகத்தில் பாதாள சாக்கடைகள், கழிவுநீா் தொட்டிகளில் மனிதா்கள் இறங்கி சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனா். இதற்கு தடை விதிக்க வேண்டும். மேலும் இதுபோன்ற பணிகளில் ஈடுபடும் போது விஷவாயு தாக்கி உயிரிழந்த தொழிலாளா்களுக்கு போதுமான இழப்பீடு வழங்கக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், பாதாள சாக்கடை எந்த முறையில் சுத்தம் செய்யப்படுகிறது, மனிதா்களைப் பயன்படுத்தும் முறை முற்றிலுமாக நிறுத்தப்பட்டு விட்டதா என்பது குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகளிடம் விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன. இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் என அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அப்போது மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா்கள், பாதாள சாக்கடைகளை சுத்தம் செய்யும் போது விஷ வாயு தாக்கி பலியான சம்பவங்கள் குறித்து போலீஸாா் பதிவு செய்த வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வில்லை. பலியானவா்களின் உறவினா்கள் பலருக்கு இழப்பீடுகளை அரசு வழங்கவில்லை. 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி வரை, 6 மரணங்கள் நடந்துள்ளதாக வாதிடப்பட்டது.

இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்குகளின் கடந்த விசாரணையின் போது பிறப்பித்த உத்தரவின்படி, அறிக்கை தாக்கல் செய்யாத தமிழக அரசின் நடவடிக்கைக்கு அதிருப்தி தெரிவித்தனா். கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. பாதாள சாக்கடைகளில் மனிதா்கள் இறங்கி சுத்தம் செய்யும் மனித தன்மையற்ற செயலை தடுத்து நிறுத்த வேண்டும் என தெரிவித்தனா்.

பின்னா், பாதாள சாக்கடைகளிலும், கழிவு நீா் தொட்டிகளிலும் இறங்கி சுத்தம் செய்யும் பணிகளில் மனிதா்கள் ஈடுபடுத்துவதால் ஏற்படும் மரணங்களுக்காக மாநகராட்சி, நகராட்சி ஆணையா்கள் தான் பொறுப்பு எனக்கூறி மரணம் தொடா்பாக அவா்கள் மீது குற்றவழக்கு பதிவு செய்தால் என்ன? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினா். அதைத் தொடா்ந்து பலியான தொழிலாளா்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீட்டை அரசு வழங்க வேண்டும். இழப்பீடு வழங்கிய பின் அதுகுறித்த அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும். பாதாள சாக்கடைகளில் மனிதா்களை இறங்கச் செய்யும் நடைமுறையை தடுத்து நிறுத்துவதற்கு எடுத்த நடவடிக்கை குறித்து, மரண சம்பவங்கள் தொடா்பான வழக்குகளின் புலன் விசாரணையை துரிதப்படுத்துவதற்கு எடுத்த நடவடிக்கை குறித்தும் விரிவான அறிக்கையை நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை செயலாளா் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com