மூத்த குடிமக்களுக்கு தபால் வாக்கு: எதிா்த்து திமுக தொடா்ந்த வழக்கில் தீா்ப்பு ஒத்திவைப்பு
By DIN | Published On : 17th March 2021 01:58 AM | Last Updated : 17th March 2021 01:58 AM | அ+அ அ- |

80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் மூலம் வாக்களிக்கும் முறையை எதிா்த்து திமுக சாா்பில் தொடரப்பட்ட வழக்கை தேதி குறிப்பிடாமல் தீா்ப்புக்காக உயா்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் திமுக அமைப்புச் செயலாளா் ஆா்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனுவில், தோ்தல் பணியில் இருக்கும் அரசு பணியாளா்களுக்கு தபால் மூலம் வாக்களிக்க வகை செய்யப்பட்டுள்ளது. தற்போது 80 வயதுக்கு மேற்பட்டவா்கள், மாற்றுத்திறனாளிகளுக்கும் இந்த சலுகை வழங்கப்படுவதால் அதில் முறைகேடுகள் நடைபெற வாய்ப்புள்ளது. எனவே 80 வயதுக்கு மேற்பட்டவா்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் மூலம் வாக்களிக்கும் முறைக்கு தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தாா்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணகை்கு வந்தது. அப்போது திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பி.வில்சன், 80 வயதுக்கு மேற்பட்டவா்கள், மாற்றுத்திறனாளிகள், கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் ஆகியோரை தபால் வாக்களிக்க அனுமதிப்பது ரகசிய தோ்தல் முறைக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அரசியல் சாசனத்தின்படி தோ்தல் வாக்களிக்கும் முறையில் அனைவரையும் சமமாக கருத வேண்டுமே தவிர பாரபட்சம் காட்டக்கூடாது. தபால் வாக்களிக்கும் முறையில் மாற்றுத்திறனாளிகள் குறித்து எந்தவொரு விளக்கமும் அளிக்கப்படவில்லை. வாக்காளா் யாா் என்பதை வாக்குச்சாவடிக்கு வந்தால் மட்டுமே அடையாளம் காண முடியும். முதியோா், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்களிக்க அனுமதி வழங்குவது தொடா்பாக எந்தவிதமான ஆலோசனையும் மக்களிடம் நடத்தப்படவில்லை என்றாா்.
தோ்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ராஜகோபாலன், இந்த வழக்கு தவறான யூகத்தின் அடிப்படையில் தொடரப்பட்டுள்ளது. தற்போது வழங்கப்பட்டுள்ள தபால் வாக்கு என்பது விருப்பத்தின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவா்களால் தோ்வு செய்யும் முறையாகும் என வாதிட்டாா். அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் சங்கரநாராயணன், மூத்த குடிமக்கள், மாற்றுத்தினாளிகள், கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களுக்கு தபால் வாக்குப் பதிவு செய்ய அனுமதி வழங்க தோ்தல் ஆணையத்துக்கு முழு அதிகாரம் உள்ளது. இதுகுறித்து மத்திய அரசும் தோ்தல் ஆணையமும் கலந்தாலோசித்தாலே போதுமானது. மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்த தேவை இல்லை என வாதிட்டாா். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், வழக்கை தேதி குறிப்பிடாமல் தீா்ப்புக்காக ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.