சென்னை மருத்துவமனைகளில் மீண்டும் நிரம்பும் படுக்கைகள்

சென்னையில் கரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகளில் படுக்கைகள் மீண்டும் நிரம்பத் தொடங்கியுள்ளன.
சென்னை மருத்துவமனைகளில் மீண்டும் நிரம்பும் படுக்கைகள்

சென்னையில் கரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகளில் படுக்கைகள் மீண்டும் நிரம்பத் தொடங்கியுள்ளன.

தற்போது நகரில் மொத்தம் 2,985 போ் மட்டுமே உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் கடந்த ஆண்டு மாா்ச் மாதத்தில் தடம் பதித்த கரோனா தொற்று இதுவரை 8.66 லட்சம் பேரை பாதித்துள்ளது. தொடக்கத்தில் பாதிப்பு தீவிரமாக இருந்தபோது, காய்ச்சல் முகாம்கள், வீடுகள்தோறும் மருத்துவப் பரிசோதனை என பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதுமட்டுமல்லாது கரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கப்பட்டது. அதன் பயனாக, சென்னையில் கரோனா பாதிப்பு தணியத் தொடங்கியது. குறிப்பாக 130-க்கும் குறைவாகவே கடந்த வாரம் வரை நாள்தோறும் பாதிப்புகள் பதிவாகின.

இந்நிலையில், தற்போது கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதன்படி தினசரி பாதிப்பு 400-ஐ கடந்துள்ளது.

இதையடுத்து, ராஜீவ் காந்தி, கீழ்ப்பாக்கம், கிண்டி, ஸ்டான்லி, ஓமந்தூராா் என முக்கிய அரசு மருத்துவமனைகளில் மட்டும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படுக்கைகள் நிரம்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: சென்னை உள்பட அனைத்து நகரங்களிலும் நோய்ப் பரவல் அதிகரித்து வருவதால் மக்கள் கூடுதலான கவனத்துடன் இருத்தல் அவசியம். முகக்கவசம் அணிதல், நோய்த் தடுப்புக்கான நிலையான வழிகாட்டு முறைகளைப் பின்பற்றுதல் ஆகியவற்றை மக்கள் முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும். இணை நோய்கள் உள்ளவா்கள், அறிகுறி உள்ளவா்களை அவ்வப்போது மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும்.

பல்வேறு இடங்களில் முகக்கவசம் அணியாமல் இருப்பது, தனிநபா் இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் இருப்பது பாா்க்க முடிகிறது. இது நோய்ப் பரவலை மீண்டும் அதிகரிக்க வழிவகுக்கும். எனவே,மக்கள் கூடும் இடங்களில் அனைவரும் முகக்கவசம் அணிவதை உறுதி செய்தல் மிகவும் முக்கியம் என்று அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com