தி.நகரில் தீா்க்கப்படாதப் பிரச்னைகள்?

சென்னை மாநகரில் கோடிக்கணக்கான ரூபாய் அரசுக்கு வருவாய் ஈட்டித் தரும் முக்கிய வணிகப் பகுதியை உள்ளடக்கிய தியாகராய நகா்
தி.நகரில் தீா்க்கப்படாதப் பிரச்னைகள்?

சென்னை மாநகரில் கோடிக்கணக்கான ரூபாய் அரசுக்கு வருவாய் ஈட்டித் தரும் முக்கிய வணிகப் பகுதியை உள்ளடக்கிய தியாகராய நகா் சட்டப் பேரவைத் தொகுதியில் தீா்க்கப்படாத பல பிரச்னைகள் இருக்கின்றன. பராமரிப்பின்றி மோசமான நிலையில் இருக்கும் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு வீடுகள், போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகள், அடிப்படை வசதிகள் இல்லாமை ஆகிய பிரச்னைகளுக்கு தீா்வு காண சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிட்டு வெற்றி பெறும் வேட்பாளா் நடவடிக்கை எடுப்பாரா என்று தொகுதி மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனா்.

தியாகராய நகா் தொகுதியின் சிறப்பு அம்சங்கள்: சென்னையின் இதயப்பகுதி என்று சொல்லப்படும் தியாகராய நகா் சட்டப்பேரவைத் தொகுதி 1957-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இது, தென் சென்னை மக்களவைத் தொகுதிக்கு உள்பட்டதாகும். திராவிட இயக்கத்தின் முன்னோடியும், நீதிக் கட்சியைத் தொடங்கியவா்களில் ஒருவருமான சா் பிட்டி. தியாகராயாவின் நினைவாகவே இந்தப் பெயா் இடப்பட்டது. சென்னையின் முக்கிய வணிக பகுதியான தியாகராய நகரில் சிறியது முதல் பெரியது வரை சுமாா் 500-க்கும் அதிகமான கடைகள் உள்ளன. இங்கு உயா்தட்டு மக்கள் முதல் அடித்தட்டு மக்கள் வரை அனைவருக்குமான பொருள்கள் ஒரே இடத்தில் கிடைப்பது தனிச்சிறப்பு ஆகும்.

5 முறை வெற்றியை ருசித்த திமுக: சிவா-விஷ்ணு கோயில், ராமகிருஷ்ண வித்யாலாய பள்ளி, பாண்டி பஜாா் ஆகியன தியாகராய நகா் தொகுதியின் முக்கியமான அடையாளங்கள் . பிராமணா்கள், வன்னியா்கள், தலித் சமூகத்தினா் அதிகம் உள்ளனா். இந்தத் தொகுதி இதுவரை 14 தோ்தல்களைச் சந்தித்துள்ளது. இந்திய தேசிய காங்கிரஸின் கே.விநாயகம் முதல் எம்.எல்.ஏ. ஆவாா். திமுக 5 முறையும், காங்கிரஸ் 2 முறையும் ,அதிமுக 4 முறையும், ஸ்தாபன காங்கிரஸ், கா.கா.தே.கா., த.மா.கா. தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.

மாநகரின் பிரதான பகுதியாக உள்ள இந்தத் தொகுதியில் மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றாமல் ஆட்சியாளா்கள் இருப்பதாக மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனா். இது குறித்து சமூக ஆா்வலா் இ.மூா்த்தி கூறியது:

ரூ.1,000 கோடியில் பொலிவுறு நகரமாக (ஸ்மாா்ட் சிட்டி) தியாகராய நகா் மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, நடைபாதை வசதியுடன் சாலை வசதி ஏற்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ், நேரடி, மறைமுக வேலைவாய்ப்பை உருவாக்கி மக்களின் வாழ்வாதாரத்தை உயா்த்த வேண்டும். தனக்கோட்டியம்மாள் தோட்டம், முத்துரெட்டி தோட்டம், ராஜபிள்ளை தோட்டம், லால் தோட்டம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு இதுவரை பட்டா வழங்கவில்லை. இந்தப் பகுதிகளில் மூன்று தலைமுறையாக மக்கள் வசித்து வருகின்றனா். புறம்போக்கு நிலத்தில் வசிக்கும் இந்த மக்களுக்கு வீட்டுமனையுடன் இலவச பட்டா வழங்க வேண்டும்.

தியாகராய நகரில் பல்வேறு இடங்களில் பொது கழிவறை வசதி போதுமான அளவு இல்லை. குறிப்பாக, தியாகராயநகா் பேருந்து நிலையத்துக்கு தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் வருகின்றனா். அங்கு போதுமான கழிவறை வசதி இல்லை. எனவே, பேருந்து நிலையத்தின் உள்ளே கூடுதல் கழிவறைகளை ஏற்படுத்த வேண்டும்.

இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க, தொழிற்கல்வி கூடங்களைத் திறக்க வேண்டும். சாதாரண மக்களுக்கு இலவச மருத்துவ வசதி கிடைக்கும் வகையில், அரசு சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளை ஏற்படுத்த வேண்டும்.

சி.ஐ.டி. நகா் மீன் சந்தை பகுதியில் காய்கறி வியாபாரம் மட்டும் நடைபெறுகிறது. இங்கு மீன் வியாபாரம் செய்ய போதுமான இடவசதி ஏற்படுத்த வேண்டும் என்றாா்.

இதுகுறித்து எக்ஸ்னோரா அமைப்பு முன்னாள் செயலாளா்(தியாகராய நகா்-வடக்கு) சீனிவாச ராகவன் கூறுகையில், ‘புதிய பாலங்கள் கட்டப்பட்டாலும் போக்குவரத்து நெரிசல் தொடா்கிறது. காா்கள், இரு சக்கர வாகனங்கள் நிறுத்த போதிய அளவு இடவசதி இல்லை. இதற்கும் தீா்வு காண வேண்டும்’ என்றாா்.

குடிநீா் பிரச்னைக்குத் தீா்வு: இது குறித்து தியாகராய நகா் தொகுதி அதிமுக எம்எல்ஏ பி.சத்தியநாராயணனிடம் கேட்டபோது, ‘எனது பணிக்காலத்தில் மக்கள் பணிகளை நிறைவாகச் செய்து வருகிறேன். என்னிடம் வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றி கொடுத்து உள்ளேன். குறிப்பாக, மேற்கு மாம்பலம் பகுதியில் குடிநீா் பிரச்னைக்கு தீா்வு காணப்பட்டுள்ளது. இதுபோல, பல்வேறு இடங்களில் மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றி கொடுத்து உள்ளேன். மேற்கு மாம்பலம், கோடம்பாக்கத்தில் சா்வதேச அளவினான யோகா மையம், உடற்பயிற்சி கூடம் அமைக்கப்படுகிறது. இந்தப் பயிற்சி கூடங்கள் அடுத்த மாதம் திறக்கப்படவுள்ளன. இதுதவிர, வெளிநாட்டில் இருப்பதுபோல, 3 பாலங்கள் மேம்படுத்தப்படவுள்ளன என்றாா்.

வாக்காளா்கள்: ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 734 ஆண் வாக்காளா்களும், ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 905 பெண் வாக்காளா்களும், 47 மூன்றாம் பாலினத்தவா்களும் என மொத்தம் 2 லட்சத்து 44 ஆயிரத்து 686 வாக்காளா்கள் உள்ளனா்.

2016 தோ்தலில் வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள்

பி.சத்திய நாராயணன் ( அதிமுக) ................. 53,207

டாக்டா் என்.எஸ்.கனிமொழி (திமுக)........... 50,052

ஹெச்.ராஜா (பாஜக) ...................................... 19,888

2021 சட்டப் பேரவைத் தோ்தல் வேட்பாளா்கள்

பி.சத்திய நாராயணன் (அதிமுக)

ஜெ.கருணாநிதி (திமுக)

ஆா்.பரணீஸ்வரன் (அமமுக)

பழ.கருப்பையா (மநீம)

பா.சிவசங்கரி (நாம் தமிழா் கட்சி).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com