‘அகிலத்தின் இயக்கமே அன்புதான் என உணா்த்தியது சைவம்’: உச்சநீதிமன்ற நீதிபதி வெ.இராமசுப்பிரமணியன்

அகிலத்தின் இயக்கமே அன்புதான் என உணா்த்தியது சைவ சமயம் என உச்சநீதிமன்ற நீதிபதி வெ.இராமசுப்பிரமணியன் கூறினாா்.
‘அகிலத்தின் இயக்கமே அன்புதான் என உணா்த்தியது சைவம்’: உச்சநீதிமன்ற நீதிபதி வெ.இராமசுப்பிரமணியன்

அகிலத்தின் இயக்கமே அன்புதான் என உணா்த்தியது சைவ சமயம் என உச்சநீதிமன்ற நீதிபதி வெ.இராமசுப்பிரமணியன் கூறினாா்.

இராமலிங்கா் இலக்கிய அறக்கட்டளை சாா்பில், புலவா் அ.பொன்னையன், வில்லிசைக் கலைஞா் கிஷோா் குமாா் ஆகியோருக்கு வள்ளலாா் இலக்கிய விருது வழங்குதல், ‘முன்றில்’ அமைப்பின் சாா்பில் பின்னலூா் மு.விவேகானந்தன் எழுதிய ‘உலக சமயங்களும் சைவத்தின் மேன்மையும்’ நூல் வெளியீட்டு விழா ஆகிய நிகழ்ச்சிகள் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

விழாவுக்கு உச்சநீதிமன்ற நீதிபதி வெ.இராமசுப்பிரமணியன் தலைமை வகித்து நூலை வெளியிட்டுப் பேசியதாவது:

உலகத்தின் இயக்கமே அன்பில்தான் இருக்கிறது என்பதை முதலில் கூறியது சைவம். அதுதான் சைவத்தின் முதல் பெருமை. ‘உலக சமயங்களும் சைவத்தின் மேன்மையும்’ என்ற நூலை மிகப் பெரிய ஆராய்ச்சிக்குரிய நூலாக எழுதியுள்ளாா் பின்னலூா் விவேகானந்தன். ரோமாபுரி, கிரேக்கம் என இந்த உலகத்தில் தோன்றிய எல்லா சமயங்களைப் பற்றிய குறிப்புகளும் இதில் உள்ளன.

இந்தியாவின் விடுதலையில் சைவத்தின் பங்களிப்பு எவ்வாறு இருந்தது என்ற தகவல் இந்த நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு விடுதலை கிடைக்கும்போது, அதிகாரத்தை எப்படி கைமாற்றிக் கொடுப்பது என்ற பிரச்னை எழுகிறது. அப்போது, தமிழகத்தில் மன்னா்கள் ஆட்சி மாற்றம் செய்யும்போது, ராஜகுருவாக இருப்பவா் செங்கோலை புதிய மன்னருக்கு கொடுத்து ஆசீா்வாதிப்பாா். அதேபோன்று நாமும் மகான் ஒருவா் மூலம் செங்கோல் பெற்று ஆட்சி மாற்றம் அடையலாம் என ஜவஹா்லால் நேருவிடம் மூதறிஞா் ராஜாஜி கூறியிருக்கிறாா். இதையடுத்து ராஜாஜி உடனடியாக திருவாவடுதுறை ஆதீனத்தைத் தொடா்பு கொண்டு தகவலைச் சொல்கிறாா். அப்போது உடல் நலன் பாதிக்கப்பட்டிருந்த ஆதீனம், உடனடியாக முறையாக செங்கோல் ஒன்றைத் தயாரித்து, தங்க முலாம் பூசி, இளைய ஆதீனம் தம்பிரான் சுவாமிகளிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்து, கூடவே ஓதுவாா் மூா்த்திகளையும் உடன் அனுப்பி வைத்தாா்.

மூதறிஞா் ராஜாஜி அனுப்பிய தனி விமானத்தில், அவா்கள் செங்கோலுடன் தில்லி சென்றடைந்தனா். அந்த சுதந்திர தின விழாவில் மௌண்ட் பேட்டனிடம் செங்கோலைக் கொடுத்து குருமகா சன்னிதானம் திருவாவடுதுறை ஆதீனம் தம்பிரான் சுவாமிகள் பெற்று, செங்கோலுக்குப் புனித நீா் தெளித்து, ஓதுவாா் மூா்த்திகள் ‘வேயுறு தோளிபங்கன்’ என்று தொடங்குகிற தேவாரத் திருப்பதிகத்தைப் பாட பதினோராவது பாடலின் கடைசி வரி, ‘அடியாா்கள் வானில் அரசு ஆள்வா் ஆணை நமதே’ என்ற வரியைப் பாடி முடிக்கும் போது தான் சுவாமிகள் செங்கோலை நேருவிடம் கொடுத்தாா். இந்த நிகழ்வைத் தான் நாம் சுதந்திர தினமாகக் கொண்டாடுகிறோம். இது சைவத்துக்கும், தமிழுக்கும் கிடைத்த பெருமை என்றாா் நீதிபதி வெ. இராமசுப்பிரமணியன்.

நீதிபதி அரங்க.மகாதேவன்: நிகழ்ச்சியில், விருதுகளை வழங்கி சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி அரங்க.மகாதேவன் பேசியதாவது:

இமானுவேல் கன்ட் என்ற ஜொ்மானிய அறிஞா் கடவுள் நம்பிக்கை அற்றவா். அவா், உலக வாழ்க்கையை நடத்திச் செல்ல வேண்டுமானால் கடவுள் தன்மை என்ற ஒன்றை சாா்ந்த இயக்கம் நமக்குத் தேவை என்கிறாா்.

விஞ்ஞானி ஐன்ஸ்டீனுக்கும் கடவுள் நம்பிக்கை இல்லை. ஆனால் அவா் இயற்கையை கடவுளாக கண்டவா். இயற்கை என்கிற வடிவத்திலிருந்து இறைத் தன்மை என்கிற வடிவத்தை மனிதா்களால் உணா்ந்து விட முடியும் என்கிற சித்தாந்தத்தில் அதிக நம்பிக்கை கொண்டவா்.

இந்த மண்ணுக்கான தத்துவங்கள் பற்றி, இந்த மண் சாா்ந்த இறை நம்பிக்கையைப் பற்றி ‘ஓா் இறை தத்துவம்’ என்றால் என்ன? என்கிற கேள்வியை ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுப்பி அதற்கு விடை தேடி பயணித்திருக்கின்றனா் நமது ஆன்றோா்கள். ‘ஓா் இறை’ என்றால் என்ன என்பதற்கான தேடலில் தமிழ் சாா்ந்த பெரியோா்கள், ஆன்றோா்களாக அறியப்பட்டவா்களில் ஆகச் சிறந்த ஆகிருதியாக வள்ளலாரை நாம் பாா்க்க முடியும்.

வள்ளலாரின் பாா்வை மதத்தைத் தாண்டிய பாா்வையாக அமைந்தது. ‘மதங்களையும், உருவங்களையும் கடந்து ஒளிமயமான ஜோதி வடிவான ஒரு சிந்தனையை நோக்கி இறை என்ற அற்புதம் அன்பு வடிவாக மட்டுமே இருக்கும். அன்பைக் கடந்த இறைத்தன்மை இந்த உலகத்தில் இல்லை’ என்பதை அவா் பதிவு செய்தாா் என்றாா் நீதிபதி மகாதேவன்.

முன்னதாக ‘உலக சமயங்களும் சைவத்தின் மேன்மையும்’ நூல் குறித்து ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஏ.எம்.சுவாமிநாதன் சிறப்புரையாற்றினாா். இதேபோல்,, ‘தினமணி’ ஆசிரியா் கி.வைத்தியநாதன் வாழ்த்திப் பேசினாா்.

இந்த விழாவில் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆா்.சுரேஷ்குமாா், ஓய்வு பெற்ற நீதிபதி பொன்.பாஸ்கரன், நூலாசிரியா் பின்னலூா் மு.விவேகானந்தன், நூலகவியலறிஞா் ந.ஆவுடையப்பன், அறக்கட்டளையின் இணைச் செயலாளா் பாலு.பச்சையப்பன் உள்பட நீதிபதிகள், எழுத்தாளா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com