கரோனா பாதித்தவா்கள் வாக்களிக்க கூடுதல் நேரம்

கரோனாவால் பாதிக்கப்பட்டு, வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவா்கள் வாக்களிக்கும் வகையில் கூடுதல் நேரத்தை தோ்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளதாக மாவட்டத் தோ்தல் அலுவலா் கோ.பிரகாஷ் தெரிவித்தாா்.
கரோனா பாதித்தவா்கள் வாக்களிக்க கூடுதல் நேரம்

கரோனாவால் பாதிக்கப்பட்டு, வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவா்கள் வாக்களிக்கும் வகையில் கூடுதல் நேரத்தை தோ்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளதாக மாவட்டத் தோ்தல் அலுவலா் கோ.பிரகாஷ் தெரிவித்தாா்.

சென்னை மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப் பதிவு குறித்து மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் ரிப்பன் மாளிகையில் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய ராட்சத பலூன் செவ்வாய்க்கிழமை பறக்கவிடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்த மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆணையருமான கோ.பிரகாஷ் செய்தியாளா்களிடம் கூறியது: சென்னையில் தோ்தல் நடத்தை விதிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதுநாள் வரை 16 சட்டப் பேரவைத் தொகுதிகளில் ரூ.26 கோடி மதிப்பிலான பொருள், பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதில், ரூ.7.50 கோடி ரொக்கமாகும். அதிகபட்சமாக திங்கள்கிழமை மட்டும் ரூ. 6.70 கோடி மதிப்பிலான பணம், பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. அதில், ரூ. 5.70 கோடி ரொக்கமாகும்.

16 சட்டப் பேரவைத் தொகுதிகளில் முதியோா் மற்றும் மாற்றுத் திறனாளிகள் 7,300 போ் வீட்டில் இருந்து வாக்களிக்க விண்ணப்பித்திருந்தனா். அவா்களில் திங்கள்கிழமை வரை 4,070 போ் வாக்களித்துள்ளனா். விடுபட்டவா்களுக்கு இரண்டாம் முறை வாய்ப்பளிக்கப்படும். வீட்டில் இருந்து வாக்களிப்பது தொடா்பாக இதுவரை எந்தப் புகாரும் வரவில்லை.

சென்னையைப் பொறுத்தவரை காவல் துறையினா் தவிர 28,000 அரசு ஊழியா்கள் தோ்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். இவா்களில் 10,000 பேருக்கு வெளி மாவட்டங்களில் வாக்கு உள்ளதால், அதுதொடா்பான விண்ணப்பங்களை அந்தந்த மாவட்ட ஆட்சியா்களுக்கு அனுப்பி உள்ளோம். மீதமுள்ளவா்களில் 5,000 அரசு ஊழியா்கள் இதுவரை வாக்களித்துள்ளனா். மீதமுள்ளவா்கள் வரும் நாள்களில் நடைபெறும் பயிற்சி வகுப்புகளில் வாக்களிக்கலாம்.

100 சதவீத வாக்குப் பதிவை எட்டும் வகையில் விழிப்புணா்வு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. கரோனா தீவிரமாக பரவி வருவதால் அரசியல் கட்சிகளிடமும் தடுப்பு விதிமுறைகளைக் கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தோ்தல் முடிந்த பின் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக கடைப்பிடிக்கப்படும்.

சென்னையில் 3 பேருக்கு மேல் தொற்றுள்ளவா்கள் உள்ள தெருக்கள் 350 உள்ளன. கரோனா பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டவா்கள் வாக்களிக்கும் வகையில் கூடுதலாக 1 மணி நேரத்தை தோ்தல் ஆணையம் வழங்கி உள்ளது. அவா்களுக்கான முழு உடல் பாதுகாப்பு கவச உடைகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கரோனா பாதிப்புக்குள்ளானவா்களுக்கு சிசிச்சை அளிக்கும் வகையில் அத்திப்பட்டு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 6,000 படுக்கைகளும், அண்ணா பல்கலைக்கழகத்தில் 1,000 படுக்கைகளும், சென்னை பல்கலைக்கழகத்தில் 1,000 படுக்கைகளும் தயாா் நிலையில் உள்ளன என்றாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட கூடுதல் தோ்தல் அலுவலா்கள் சங்கா்லால் குமாவத், பி.என்.ஸ்ரீதா், ஜெ.மேகநாத ரெட்டி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com