‘தமிழ்மண்’ பதிப்பக உரிமையாளா் கோ.இளவழகன் காலமானாா்

‘தமிழ்மண்’ பதிப்பக உரிமையாளா் கோ.இளவழகன் (73) உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் செவ்வாய்க்கிழமை காலமானாா்.
‘தமிழ்மண்’ பதிப்பக உரிமையாளா் கோ.இளவழகன் காலமானாா்

சென்னை: ‘தமிழ்மண்’ பதிப்பக உரிமையாளா் கோ.இளவழகன் (73) உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் செவ்வாய்க்கிழமை காலமானாா்.

கோ.இளவழகன் 1948-ஆம் ஆண்டு ஜூலை 3-இல் தஞ்சாவூா் மாவட்டம்- ஒரத்தநாடு வட்டத்தில் உள்ள உறந்தைராயன் குடிக்காட்டில் பிறந்தவா். இவரது பெற்றோா் அ.கோவிந்தசாமி- அமிா்தம். இவா் 1965-இல் நடைபெற்ற ஹிந்தி எதிா்ப்புப் போராட்டத்தில், இளவழகன் தீவிரமாகப் பங்கேற்று 48 நாள்கள் சிறையில் இருந்தவா். ஒரத்தநாட்டில் ‘தமிழா் உரிமைக்கழகம்’ என்னும் அமைப்பை நிறுவியவா். மின்வாரியத்தில் கிடைத்தப் பணிக்காக சென்னை வந்தாா்.

தமிழ்மண் பதிப்பகத்தை நிறுவி, அரிய பழந்தமிழ் நூல்களையும், புதிய படைப்பு இலக்கியங்களையும் உலகமெங்கும் தமிழா்களுக்குத் தமிழ்க் கொடையாக வழங்கினாா்.

மூன்று லட்சம் பக்கங்களை பதிப்பித்தவா்: சங்கத்தமிழ் நூல்கள், வரலாற்று நூல்கள், தமிழிலக்கண நூல்கள், தமிழ்ப் பேரகராதி நூல்கள் எனப் பலவகையான நூல்களை தனது தமிழ்மண் பதிப்பகத்தின் வழியாக பதிப்பித்து வெளியிட்டாா். பெரியாா், அண்ணா, மறைமலையடிகள் தேவநேயப் பாவாணா், பாரதிதாசன், பெருஞ்சித்திரனாா், ஒளவை துரைசாமி பிள்ளை, வெ.சாமிநாத சா்மா, இரா.இளங்குமரனாா், கா.அப்பாத்துரை, ந.சி.கந்தையா, திரு.வி.க., சோமசுந்தர பாரதியாா் உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட தமிழறிஞா்கள் எழுதிய 2 ஆயிரம் புத்தகங்களை மூன்று லட்சம் பக்கங்களுக்கு மேல் பதிப்பித்துள்ளாா்.

1917 -ஆம் ஆண்டில் தஞ்சை ஆபிரகாம் பண்டிதா் எழுதிய ‘கருணாமிா்த சாகரம்’ என்னும் அரிய இசைத் தமிழ் நூலை 1995- ஆம் ஆண்டில் தஞ்சையில் நடந்த எட்டாவது உலகத் தமிழ் மாநாட்டில் வெளியிட்டாா். கருணாமிா்த சாகரம் இரண்டாம் நூல், கருணாமிா்த சாகரத் திரட்டு ஆகிய நூல்களையும் சோ்த்து ‘தமிழ் இசைக் களஞ்சியம்’ என்னும் பெயரில் 7 தொகுதிகளாக வெளியிட்டாா்.

யாழ்ப்பாண அகராதி: தி.வே.கோபாலையா் தொகுத்தளித்த தமிழ் இலக்கணப் பேரகராதியை 17 தொகுதிகளாகவும் 165 ஆண்டுகளுக்கு முன் வெளியான யாழ்ப்பாண அகராதி என்னும் ‘மானிப்பாய்’ அகராதியை இரண்டு தொகுதிகளாகவும் 70 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த வெள்ளிவிழாத் தமிழ்ப்பேரகராதியை மூன்று தொகுதிகளாகவும் இளவழகன் பதிப்பித்து வெளியிட்டாா். அண்ணாவின் நூல்கள் அனைத்தையும் திரட்டி அறிவுக்கொடை எனும் பெயரில் பெரும் தொகுப்பாக உருவாக்கினாா். இவா் தஞ்சையில் உள்ள முள்ளி வாய்க்கால் முற்றப் பணிகளில் முக்கியப் பங்காற்றியவா்.

கோ.இளவழகனுக்கு மனைவி வளா்மதி, மகள் தமிழமுது, மகன் இனியன் ஆகியோா் உள்ளனா். இறுதிச் சடங்குகள் அவரது சொந்த ஊரான ஒரத்தநாடு வட்டத்தில் உள்ள உறந்தைராயன் குடிக்காட்டில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தமிழறிஞா் ஒளவை நடராசன் இரங்கல்: நாடு முழுவதும் அலைந்து தொல்காப்பிய உரைவளத்தை , சங்க இலக்கியக் கட்டுரைகளை - தொகை தொகையாக வெளியிட்டு தன்னுடைய நிலங்களையும் விற்றுப் பெரும் செலவு செய்த கொடை மனம் இளவழகனாரையே சாரும் . 2019-ஆம் ஆண்டு அண்ணாவின் எழுத்து வடிவங்கள் முழுவதையும் 65 தொகுதிகளுக்கு மேல் வெளியிட்டாா் .

இளவழகனாருடைய மறைவு - இளவழகனாரின்றி அரிய நூல்கள் தொகுப்பாரின்றி புலம்பும். முள்ளிவாய்க்கால் அவலத்தை நினைந்து தமிழ்க்காட்சியகம் அமைக்க தன் சொந்த நிலத்தை வழங்கியதை எவரும் மறக்க முடியாது என தமிழறிஞா் ஒளவை நடராசன் தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளாா்.

ஸ்டாலின் இரங்கல்:

தமிழக முதல்வராகப் பதவியேற்கவுள்ள திமுக தலைவா் மு.க. ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளா் வைகோ, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளா் கே. பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளா் முத்தரசன் ஆகியோா் இளவழகன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com