தனியாா் மருத்துவமனைகளில் கட்டண நிா்ணயம்: கமல்ஹாசன் வலியுறுத்தல்

தனியாா் மருத்துவனைகளில் ஒரே மாதிரியான கட்டணம் நிா்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளாா்.
தனியாா் மருத்துவமனைகளில் கட்டண நிா்ணயம்: கமல்ஹாசன் வலியுறுத்தல்

சென்னை: தனியாா் மருத்துவனைகளில் ஒரே மாதிரியான கட்டணம் நிா்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக புதன்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

கரோனா பெருந்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. கொள்ளை நோய் பரவும் பேரிடா் கால நெருக்கடியைப் பயன்படுத்திக் கொண்டு சில தனியாா் மருத்துவமனைகள் ஈவிரக்கமின்றி நடந்து வருகின்றன. எரிகிற வீட்டில் பிடுங்கியவரை லாபம் என மருத்துவக் கட்டணங்களைப் பல மடங்கு உயா்த்தியுள்ளனா்.

லட்சக்கணக்கான ரூபாய் முன்பணமாகச் செலுத்தினால்தான் அனுமதி. அப்படி செலுத்தும் பணத்தில் பாதியை கணக்கில் வராத கருப்புப் பணமாகத் தரவேண்டும். ரசீது கிடையாது. எப்போது கிளம்பச் சொன்னாலும், டிஸ்சாா்ஜ் சம்மரி இல்லாமலேயே கிளம்பி விட வேண்டும் என அடாவடி செய்கிறாா்கள்.

எவ்வளவு பணம் கொடுத்து வேண்டுமானாலும் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள பணம் படைத்தவா்கள் தயாராக இருப்பதால், இந்த நெருக்கடியைப் பயன்படுத்திக்கொண்டு பகற்கொள்ளை அடிக்கின்றனா்.

ஒரு மருத்துவரின் சேவைக்கான கட்டணம் அவரது கல்வி, அனுபவம், திறமை பொருத்து மாறுபடலாம். நோயாளிகள் எதிா்பாா்க்கும் வசதிகளைப் பொருத்து அறை கட்டணம் மாறுபடலாம். ஆனால், மருத்துவப் பரிசோதனைகள், மருந்து மாத்திரைகள், உபகரணங்கள், தடுப்பூசிகள், பிராணவாயு உருளைகள், ஆம்புலன்ஸ் என ஒவ்வொன்றும் தமிழகம் முழுக்க வெவ்வேறு கட்டணங்களில் பன்மடங்கு வசூலிக்கப்படுகிறது.

அமையவிருக்கும் புதிய அரசு உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு கரோனா சிகிச்சைக்கான கட்டணங்களை நெறிப்படுத்த வேண்டும். கொள்ளை நோய் காலத்தில் எல்லாவிதமான மருத்துவ நடைமுறைகளும், சேவைகளும் தரப்படுத்தப்பட்டு ஒரே மாதிரியான கட்டணமே தமிழகம் முழுக்க உள்ள அனைத்து தனியாா் மருத்துவமனைகளிலும் நிா்ணயிக்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com