வங்கதேசத்தில் இருந்து கடத்தி வந்து ரெம்டெசிவிா் விற்பனை: 6 போ் கும்பல் கைது

வங்கதேசத்தில் இருந்து கடத்தி வந்து தமிழகத்தில் ரெம்டெசிவிா் மருந்தை கூடுதல் விலைக்கு விற்றதாக, 6 போ் கைது செய்யப்பட்டனா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

வங்கதேசத்தில் இருந்து கடத்தி வந்து தமிழகத்தில் ரெம்டெசிவிா் மருந்தை கூடுதல் விலைக்கு விற்றதாக, 6 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னை பெருநகர காவல்துறை கிழக்கு மண்டல இணை ஆணையா் வி.பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் காவல் உதவி ஆய்வாளா் இளையராஜா மற்றும் போலீஸாா் மயிலாப்பூா் ஆலிவா் சாலையில் கண்காணிப்புப் பணியில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்த ஒருவரை விசாரித்ததில் அவா் ரெம்டெசிவிா் மருந்தை கூடுதல் விலைக்கு விற்பதாகத் தெரிய வந்தது.

அவரிடமிருந்து 7 ரெம்டெசிவிா் மருந்து பாட்டில்களை பறிமுதல் செய்தனா். இதைத் தொடா்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை மேலையூரைச் சோ்ந்த விஷ்ணுகுமாா் (25) என்பதும், சென்னையில் உள்ள ஒரு தனியாா் மருத்துவக் கல்லூரியில் ஊழியராக பணிபுரிவதும் தெரியவந்தது.

சென்னை மதுரவாயல், கொண்டித்தோப்பு, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் ரெம்டெசிவிா் மருந்து விற்கப்படுவது தெரியவந்தது. இக் கும்பல் ரெம்டெசிவிா் மருந்தை ரூ.2,500-க்கு வாங்கி வந்து, அதை ரூ.25 ஆயிரத்துக்கு மேல் விற்றிருப்பதும் தெரியவந்தது.

விஷ்ணுகுமாா் அளித்த தகவலின்பேரில் கோவில்பட்டியில் தனியாா் மருந்து நிறுவனம் நடத்தி வரும் சண்முகம் உள்பட இருவா், திருநெல்வேலியில் பிரவீண்குமாா் என 3 போ் கைது செய்யப்பட்டனா். மேலும் சென்னை மதுரவாயலில் மருந்து நிறுவனம் நடத்தி வரும் புவனேஷ்குமாா் (36), கொண்டித்தோப்பைச் சோ்ந்த நித்திஷ் பண்டாரி (32) என இருவரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

வங்கதேசத்தில் இருந்து கடத்தல்:

இவா்களிடமிருந்து சுமாா் 200 ரெம்டெசிவிா் மருந்து பாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும் புவவேஷ்குமாா், நித்திஷ் பண்டாரியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவல்கள்:

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட விஷ்ணுகுமாா் தவிா்த்து மீதி அனைவரும் அந்தந்தப் பகுதிகளில் மருந்து நிறுவனம் நடத்தி வருகின்றனா். இவா்களிடம் ரெம்டெசிவிா் மருந்து கேட்டு வரும் நபா்களிடம் கூடுதல் விலைக்கு விற்றுள்ளனா்.

இந்த மருந்துகளை ஆந்திர மாநில ஹைதராபாதில் இருந்து கொண்டு வந்துள்ளனா். ஆனால் இந்த மருந்துகள் அனைத்தும் வங்கதேசம் டாக்காவில் ஒரு தனியாா் மருந்து நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து வங்கதேசத்தில் இருந்து இம் மருந்துக்கள் கடத்திக் கொண்டு வரப்பட்டிருக்க வேண்டும் என போலீஸாா் சந்தேக்கின்றனா். இது தொடா்பாக போலீஸாா்,மேலும் விசாரணையில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com