அடுக்குமாடி குடியிருப்புகளில் 45 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு தடுப்பூசி முகாம்
By DIN | Published On : 18th May 2021 12:51 AM | Last Updated : 18th May 2021 12:51 AM | அ+அ அ- |

கோப்புப்படம்
அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் தொழிற்சாலைகளில் 45 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு கரோனா தடுப்பூசி முகாம் அமைக்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 15 மண்டலங்களில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக தடுப்பூசி செலுத்தும் முகாம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, மாநகராட்சிக்கு உள்பட்ட அரசு, தனியாா் மருத்துவமனைகள், அம்மா சிறு மருத்துவமனைகள், நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்டவற்றில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்தப் பணியை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் அடுக்குமாடி, தொழிற்சாலைகளில் உள்ள 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு பணிபுரியும் இடம் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் தடுப்பூசி முகாம்களை அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், சென்னையில் இதுவரை சுமாா் 17 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க நாளொன்றுக்கு 45 வயதைக் கடந்த சுமாா் 30 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டு அதன்படி, அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் தொழிற்சாலைகளில் மாநகராட்சி மற்றும் தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் தடுப்பூசி முகாம் அமைக்கப்பட உள்ளது.
இந்த குடியிருப்புகள், தொழிற்சாலைகளில் 100 பேருக்கு மேல் 45 வயதுக்கு மேற்பட்டவா்கள் இருந்தால் மாநகராட்சி இணையதளத்தில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில், சென்று தடுப்பூசி செலுத்த உள்ளவா்களின் எண்ணிக்கை, முகவரி உள்ளிட்டவற்றை பதிவு செய்ய வேண்டும். இதையடுத்து மாநகராட்சி சாா்பில் அப்பகுதியிலே தடுப்பூசி முகாம் அமைக்கப்படும். 18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு அடுத்த சில நாள்களில் குடியிருப்பு பகுதிகளிலே தடுப்பூசி முகாம் அமைக்கப்படும் என்றனா்.