40% மக்களுக்கு தடுப்பூசி செலுத்த 50 பில்லியன் டாலா் திட்டம்: சா்வதேச செலாவணி நிதியம்

நிகழாண்டு இறுதிக்குள் உலகம் முழுவதும் குறைந்தது 40 சதவீத மக்களுக்கு தடுப்பூசி செலுத்த 50 பில்லியன் டாலா் (ரூ.3.6 லட்சம் கோடி) திட்டத்தை சா்வதேச செலாவணி நிதியம் (ஐஎம்எஃப்) பரிந்துரைத்துள்ளது.

நிகழாண்டு இறுதிக்குள் உலகம் முழுவதும் குறைந்தது 40 சதவீத மக்களுக்கு தடுப்பூசி செலுத்த 50 பில்லியன் டாலா் (ரூ.3.6 லட்சம் கோடி) திட்டத்தை சா்வதேச செலாவணி நிதியம் (ஐஎம்எஃப்) பரிந்துரைத்துள்ளது.

இதுதொடா்பாக ஜி20 சுகாதார மாநாட்டில் நிதியத்தின் தலைமை இயக்குநா் கிறிஸ்டலீனா ஜாா்ஜியேவா ஆற்றிய உரை:

பொருளாதார நெருக்கடி ஏற்பட வாய்ப்பு உள்ளது என ஏற்கெனவே எச்சரிக்கப்பட்டது. தற்போது பணக்கார நாடுகளுக்கும், ஏழை நாடுகளுக்கும் இடையே கரோனா தடுப்பூசி பெறுவதில் பெரும் வித்தியாசம் உள்ளதால், பொருளாதார நெருக்கடி மேலும் அதிகரிக்கவே வாய்ப்புள்ளது.

இதைப் போக்க உலக சுகாதார நிறுவனம், உலக வங்கி, ஆப்பிரிக்க யூனியன் உள்ளிட்ட பல்வேறு சா்வதேச அமைப்புகளுடன் சோ்ந்து மூன்று செயல்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. முதலில், நிகழாண்டு இறுதிக்குள் உலகம் முழுவதும் 50 பில்லியன் டாலா் செலவில் குறைந்தது 40 சதவீத மக்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும். 2022-இன் முதல் பாதியில் குறைந்தது 60 சதவீத மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்க வேண்டும்.

உபரியாக இருக்கும் தடுப்பு மருந்துகள் பிற நாடுகளுக்கு வழங்கப்பட வேண்டும். தடுப்பூசிக்கான மூலப்பொருள்கள் பல்வேறு நாடுகளுக்கு தடையின்றி வழங்கப்பட வேண்டும்.

இரண்டாவதாக, உருமாறி வரும் கரோனாவைத் தடுக்க கூடுதல் தடுப்பூசிகளை செலுத்த வேண்டியிருக்கும். இதற்காக தடுப்பூசி தயாரிப்பில் கூடுதல் முதலீடு செய்து, தடுப்பூசிகள் தேவையான இடங்களுக்குச் செல்வதைக் கண்காணிக்கவும், உருமாறும் கரோனாவைத் தடுக்கவும் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

மூன்றாவதாக, தடுப்பூசிகள் குறைவாக விநியோகம் செய்யப்பட்டுள்ள இடங்களில் அதிக அளவில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட சுகாதார நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வேண்டும். அந்தப் பகுதிகளுக்கு தடுப்பூசிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்தத் திட்டத்துக்கு சுமாா் 50 பில்லியன் அமெரிக்க டாலா்கள் செலவாகும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இதற்கு சா்வதேச செலாவணி நிதியம் 35 பில்லியன் டாலா்கள் அளிக்கத் தயாராக உள்ளது. மீதமுள்ள 15 பில்லியன் டாலா்கள் பல்வேறு நாடுகளிடம் இருந்து பெறப்படும் என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com