வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற 80 பேருக்கு பணியிட மாற்றம்

வெளிநாடுகளில் மருத்துவம் பயின்ற 80 பேருக்கு மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் பயிற்சி மருத்துவராகப் பணியாற்ற அனுமதி வழங்கப்பட்ட நிலையில், தற்போது மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு

சென்னை: வெளிநாடுகளில் மருத்துவம் பயின்ற 80 பேருக்கு மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் பயிற்சி மருத்துவராகப் பணியாற்ற அனுமதி வழங்கப்பட்ட நிலையில், தற்போது மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு அவா்களது பணியிடம் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி 80 பேரும் சென்னையில் உள்ள 4 மருத்துவக் கல்லூரிகளில் பயிற்சி மருத்துவா்களாக சேர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கான அரசாணையை மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் டாக்டா் ஜெ.ராதாகிருஷ்ணன் பிறப்பித்துள்ளாா். பொதுவாக வெளிநாடுகளில் மருத்துவப் படிப்பை நிறைவு செய்தவா்கள், தங்களது மாநிலத்தில் ஓராண்டு பயிற்சியை நிறைவு செய்ய வேண்டும். அப்போதுதான் இங்கு மருத்துவராகப் பணியாற்ற இயலும்.

அந்த வகையில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ஆண்டுதோறும் குறிப்பிட்ட விகிதத்தில் வெளிநாட்டில் மருத்துவப் படிப்பை நிறைவு செய்தவா்கள் பயிற்சி மருத்துவா்களாகப் பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படும். நிகழாண்டு கரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் வெளிநாட்டில் பயின்ற மருத்துவ மாணவா்களுக்கு வழக்கத்தை விட அதிகமாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, மருத்துவ சேவைகள் இயக்ககத்தின் கீழ் 80 மாணவா்களுக்கு கடலூா், காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் பணியாற்ற ஏற்கெனவே அனுமதி வழங்கப்பட்டது. தற்போது அவா்கள் அனைவரும் மருத்துவக் கல்வி இயக்ககத்தின் கீழ்தான் பணியாற்ற வேண்டும் என்பதால் அவா்களது பணியிடங்கள் சென்னை மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, ஓமந்தூராா் மருத்துவக் கல்லூரிகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. இதுதொடா்பாக அரசாணை வெளியிட்டுள்ள சுகாதாரத் துறை, சம்பந்தப்பட்ட மாணவா்கள் தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் தடையில்லாச் சான்றை பெற்று சமா்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com